பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

கம்போடிய முடியரசு, ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். பழைய தமிழ் இலக்கியங்களில் கம்புஜம் அல்லது காம்புசம் என்று அழைக்கப்படும் இந்த நாடு, காலத்திற்கு காலம் பல பெயர்களைத் தாங்கி நிற்கிறது. 1970 மார்ச் மாதம், புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆதரவாளர் ஜெனரல் லொன் நொல், இந்த நாட்டிற்கு வைத்த பெயர் கிமர் (KHMER). அதன்பின்னர், 1975ல் கம்போடியாவை ஆட்சி செய்த போல் பாட் (pol pot) சூட்டிய பெயர் கம்புஜியா. வியட்நாமியப் படையெடுப்பு மூலம் பொல் பொட் ஆட்சி முடிவுகட்ட பின், இந்நாட்டுக்கு வைக்கப்பட்ட பெயர் கம்போடியா. இந்தப் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. இந்நாட்டில் ஏறக்குறைய 1.5 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் “புலோம் பென்”. 

இதுவே, இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், ‘கிமர்’ (Khmer) எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர்கள், பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கம்போடியாவின் எல்லைகளாக மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்தும், வடகிழக்கில் லாவோஸும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாமும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. 

கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக, ‘மீக்கோங்’ ஆறும், ‘தொன்லே சாப்’ ஏரியும் உள்ளன. நெசவு, கட்டுமானம், மற்றும் சுற்றுலா ஆகியவை கம்போடியர்களின் முக்கிய தொழில்களாக உள்ளன. கம்போடியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான அங்கோர் வாட் கோவில் பகுதிக்கு, உலகிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். உலகின் பெரிய கட்டுமான அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்த அங்கோர் வாட் கோவிலை நிர்மாணித்தவர் தமிழர்.
கம்போடியாவில் முதல் முன்னேறிய நாகரிகம், கி.மு. முதலாம் நூற்றாண்டில் தோன்றியது. கி.பி. 3ம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, கம்போடியா இந்திய அரசுகளான ஃபூனான், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர். அவர்கள், ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை, கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தனர். ஆறுகளைத் திருப்பிவிட்டது, நீர்த்தேக்கங்களை அமைத்தது, பெரிய பாலங்களை உருவாக்கியது போன்ற கட்டமைப்புத் திட்டங்களை பெருமளவில் நிறைவேற்றினர்.

கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகராக அங்கோர் நகரம் உருவானது. இங்குதான், 500 ஏக்கரில் உலகின் பிரம்மாண்டங்களில் ஒன்றான அங்கோர் வாட் என்ற கோவில் கட்டப்பட்டது. கம்போடியாவை ஆட்சி செய்த இரண்டாம் சூரியவர்மன் (கி.பி. 1113 – -1150) என்ற மன்னரால், இக்கோவில் உருவாக்கப்பட்டது. சூர்யவர்மன், தமிழகத்திலிருந்து சென்ற அரச வம்சத்தவராவார். வாட் என்கிற வார்த்தை, கோவில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல்லாகும். அங்கோர் நகரின், அங்கோர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதிசயக்கத்தக்க தமிழர்களின் கட்டுமானக் கலைக்குச் சான்றாக விளங்கும் அங்கோர் வாட் கோவிலை, உலகப் பாரம்பரியச் சின்னமாக (World Hertiage Monument) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

மொத்தம் 402 ஏக்கர் பரப்பில், 54 கோபுரங்களுடன் பெரிய கோவில் வளாகம் அமைந்துள்ளது. முதலில் விஷ்ணு தெய்வத்துக்காக எழுப்பப்பட்ட இக்கோவிலின் ஆரம்பக்கட்ட பணிகள், 12ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தொடங்கின. மன்னர் இரண்டாம் சூர்யவர்மன் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்புதான், இதன் வேலைகள் நிறைவடைந்தன. 12ம் நூற்றாண்டின் இறுதியில், இக்கோவில் புத்த கோவிலாக மாற்றமடைந்தது. இந்த கோவிலின் ஒரு பக்க சுற்றுச்சுவரே 3.6 கிலோமீட்டர்கள். அப்படி என்றால், இந்த கோவில் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை நாமே கற்பனை செய்து கொள்ளலாம். அங்கோர் வாட் கோவில், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இந்து மதம் பரவவும், அதைத்தொடர்ந்து, புத்த மதம் பரவவும் முக்கிய காரணமாய் அமைந்தது.

எனினும், கோவில் கட்டமைப்பதற்காக, ஏராளமான பொருளாதாரம் வாரியிறைக்கப்பட்டது. இதனால், பெரும் நிதிப்பற்றாக்குறையில் கிமர் பேரரசு சிக்கி, விரைவிலேயே வீழ்ச்சியை அடைந்தது. இந்நிலையில், கம்போடியாவில் உள்ள பிற பழமையான கோவில்களைப் போலவே, அங்கோர் வாட்டும் தாவர வளர்ச்சி, பூஞ்சை, போர் சேதம் மற்றும் சிலை திருட்டு ஆகியவற்றை ஏராளமாகச் சந்தித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அங்கோர் வாட் கோவில் இருந்ததால், மக்கள் தொடர்பற்றுப் போனது. இதனால், கோவில் சிதிலமடையத் தொடங்கியது. வெகுகாலம் கழித்து, 1586ம் ஆண்டு, அந்தோனியோ என்ற போர்சுகீசிய துறவி, அங்கோர் வாட் கோவிலை கண்டடைந்தார். அதைக் கண்ட அவர், பெரும் வியப்படைந்து, மற்றவர்களிடம் இக்கோவிலைப் பற்றிக் கூறினார். பின்னர், ஹென்ரி என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்தகத்தில், இந்தக் கோவிலின் சிறப்பை வெளியிட்ட நிலையில், அங்கோர் வாட்டின் புகழ், உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது. 1960 களில், அங்கோர்வாட் கோவிலில் பெருமளவில் புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கம்போடிய நாட்டு தேசியக்கொடியில், தமிழர்கள் கட்டிய இந்த கோவில், ‘தேசியச் சின்னமாக’ இடம்பெறும் அளவுக்கு, அங்கோர் வாட் கோவில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

– மு.கோபி

Comments

Popular posts from this blog

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்