மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்

உலக வரலாற்றில், ஜரோப்பிய மறுமலர்ச்சி என்ற சம்பவம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா கலாச்சாரத்தில் ஏற்பட்ட புதிய திருப்புமுனையே ஜரோப்பிய மறுமலர்ச்சி (Europe renaissance) எனப்படுகிறது. மறுமலர்ச்சி என்றால் 'மீண்டும் மலர்தல்' அல்லது 'புத்துயிர்ப்பு' என்று பொருள்.

கடந்த 1453ம் ஆண்டு, கிழக்கு ரோமப் பேரரசின் வர்த்தக மையமாக செயல்பட்ட கான்ஸ்டாட்டிநோப்பிள் துறைமுகத்தை ( Constantinople) ஒட்டோமன் துருக்கியர்கள் கைப்பற்றினர். இதுவே, ஜரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். இந்த படையெடுப்பால், கிழக்கு ரோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள், மேற்கு ரோம பேரரசிற்கு இடம் பெயர்ந்தனர். அப்படி செல்லும்போது, கான்ஸ்டாட்டிநோப்பிளில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பண்டைய நூல்களையும் கூடவே எடுத்து சென்றனர். அறிஞர்கள், அறிவுப் பொக்கிஷமாக இருந்த பலதுறை நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்தனர். பண்டைய இலக்கியங்களை கற்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். இதனால், மேற்கு ரோம பேரரசில் புதிய கருத்துக்களின் தாக்கம் ஏற்பட்டது. இதன்விளைவாக, 14ம், 15ம் நூற்றாண்டுகளில் கிரேக்க, ரோம கலாச்சாரம் மீண்டும் புத்துயிர்ப்பு அடைந்தது.

தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை மக்கள் புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தனர். எந்த ஒரு விஷயத்தையும் ஆய்வு செய்யும் போது ஏன்? ஏதற்கு? எப்படி? போன்ற கேள்விகளை அடிப்படையாக வைத்து, தர்க்க ரீதியாக ஆய்வுகளை நிகழ்த்தினார்கள். அதுவரை இருண்ட காலத்தில் இருந்த ஜரோப்பிய அரசியல், பொருளாதார, விஞ்ஞான துறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஜரோப்பாவில் புதிய நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே 'மறுமலர்ச்சி' என அழைக்கப்படுகிறது.

அறிவியல் கண்ட முன்னேற்றம்


கிறிஸ்தவ மதபீடம் என்ற ஒரு குறுகிய போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், பின்னர் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜரோப்பிய மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கின. கத்தோலிக்க திருச்சபையின் ஊழல் நடவடிக்கைக்கு எதிராக அன்றைய அறிவுஜீவிகள், பல சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்தார்கள். அதற்கு மக்களும் ஆதரவு அளித்தார்கள்.

‘உலகம் தட்டையானது’ என்பன போன்ற மதத்தின் பெயரால் நிலவி வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, விஞ்ஞானிகள் ஆய்வின் அடிப்படையில் புதிய கருத்துகளை வெளியிட்டனர். வானியலின் தந்தை எனப் போற்றப்படுகிற போலந்து நாட்டைச் சேர்ந்த 'நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்' (Nicolaus Copernicus) நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர். அதுவரை பூமியைத்தான் எல்லா கோள்களும் சுற்றி வருகிறது என்று நம்பப்பட்டு வந்த கருத்துக்கு எதிராக, பூமி சூரியனை வலம் வருகிறது என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். அதுதவிர, மற்ற கோள்களும் சூரியனை சுற்றி வலம் வருகின்றன என்பதை நிரூபித்து காட்டினார். அவரை அடுத்து, ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்லர் (Johannes Keple) என்ற விஞ்ஞானி அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன என்றார்.

இத்தாலியைச் சேர்ந்த 'கலிலியோ' (Galileo Galilei) என்ற விஞ்ஞானி ஆற்றிய சாதனைகளும் ஏராளம். கணித பேராசிரியரான இவர், உயர்தரமான தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். அதன்மூலம், சந்திரனை கண்காணித்து, அங்கே பூமியைப் போல மலைகள், சிகரங்கள் காணப்படுகின்றன என்றார். கோப்பர்நிக்கசின் கருத்துகளை ஆதரித்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவலாய தலைமை, கலிலியோவை நாடு கடத்தியது. ஜசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி, 'நியூட்டனின் விதி' என்ற கோட்பாட்டின் வழியாக, விஞ்ஞான வளச்ச்சிக்கு வழியமைத்தார். எந்த ஒரு வினைக்கும், சமனான எதிர்வினை உண்டு என்பதை செய்முறை வழியாக நிரூபித்துக் காட்டினார்.

ஜெர்மனியரான 'ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்' என்ற விஞ்ஞானி அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பு துணைபுரிந்தது. மறுமலர்ச்சி கருத்துகளை மக்கள் மத்தியில் நூல் வடிவில் பரப்ப, அச்சியந்திரம் உதவியதால் மக்களிடையே அறிவியல் சிந்தனைகள் எளிதாக ஊடுருவின.


உயரம் சென்ற மருத்துவம்

மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்ட புது யுகத்தில், மருத்துவத் துறை சிறப்பான வளர்ச்சியினை அடைந்தது. 'மைக்கல் சர்வேஸஸ்' ( Michael Servetus)என்பவர் மனிதனுடைய இரத்தம் சுத்திகரிக்கப்படுவதில், நுரையீரலுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கண்டுபிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 'வில்லியம் ஹார்வே' (William Harvey) என்ற விஞ்ஞானி இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் பற்றிய கருத்தினை முதன்முதலில் முன்வைத்தார்.

அரசியல் மாற்றம்

சமய சீர்திருத்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு கத்தோலிக்க மதகுருமார்களின் அளவுக்அகு அதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரம் மன்னனது கைகளிற்கு திரும்பியது. அதேபோல், ஜரோப்பாவில் நிலப்பிரபுக்களுக்கு இருந்த அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமைகள், சலுகைகள் போன்றவை இல்லாமல் ஒழிக்கப்பட்டன. மத்தியதர வகுப்பினர் அரசின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இதனால், ஜரோப்பிய அரசியலில் உறுதித்தன்மையும், தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டது. ஜரோப்பாவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் தேசிய அரசுகளாக எழுச்சி பெற்றன.


பொருளாதார புரட்சி

மறுமலர்ச்சியானது ஜரோப்பிய வரலாற்றில் பொருளாதாரத்திலும் புதுயுகத்தை தோற்றுவித்தது. மன்னர்கள், பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார்கள். மறுமலர்ச்சி காலத்தில், ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. மனிதசக்திக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு குறுகிய நேரத்தில் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து அதிக வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள்இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்க, ஐரோப்பியர்கள் புதிய நாடுகளைத் தேடி பயணப்பட்டனர். திசைகாட்டும்கருவி, தொலைநோக்கி, படகு, ஆயுதங்கள் போன்ற கருவிகள் அவர்களுக்கு நாடுகளைக் கடக்க உதவியாய் இருந்தது.

ஜரோப்பியர்கள் கப்பல் கட்டும் தொழிலை விரிவுப்படுத்தினார்கள். அதன் பயனாக கடல்கடந்த வர்த்தகம் வளர்ச்சியடைந்தது. வணிகத்துக்காக சென்றபோது பல நாடுகளைக் கைப்பற்றினார்கள். அங்கு தமது வர்த்தகப் பொருட்களை விற்பனை செய்ததுடன் அங்கிருந்த மூல பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்றனர். அதனைப் பயன்படுத்தி பல வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்தார்கள்.

இந்த வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வங்கி போன்ற பொருளாதார நிறுவனங்களும், வர்த்தக நகரங்களும் தோற்றுவிக்கப்பட்டன. பண்டமாற்று முறை வீழ்ச்சியடைந்தது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கின்ற விஷயமாக, பணம் மாற்றம் பெற்றது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஜரோப்பாவில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டது.

சுருக்கமாக சொன்னால், ஜரோப்பிய நாகரிகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட திருப்புமுனையே ஐரோப்பிய மறுமலர்ச்சி எனப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்