சீனாவை ஒருங்கிணைத்த யுவான் அரசு

நாடோடிகளாகவும், மூர்க்கமான கொள்ளையர்களாகவும் வாழ்ந்த மங்கோலிய இன மக்களை செங்கிஸ்கான் ஒருங்கிணைத்து, மாபெரும் மங்கோலிய பேரரசை உருவாக்கினார் என்று ஏற்கனவே படித்தோம். மங்கோலிய பேரரசு ஐரோப்பிய, ஆசிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அந்த அரச மரபில் வந்த செங்கிஸ்கானின் பேரன் குப்லாய்கான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுவான் அரச மரபை தோற்றுவித்தவர்.

பேரரசன் செங்கிஸ்கானின் விருப்பத்திற்குரிய இளையமகனான தொலுய் என்பவரின் மகன்தான் குப்லாய். சிறுவயது தொட்டே, வில் எய்துவதிலும், குதிரை ஏற்றத்திலும் திறன் படைத்தவராக குப்லாய் இருந்தார். பவுத்த மதத்தை ஆழ்ந்து படித்தார். குப்லாய் கானுக்கு மங்கோலியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த வடசீனாவின் ஒரு சிறு பகுதியை, ஆட்சி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. குப்லாய்க்கு 30 வயதாக இருக்கும்போது, அவரது மூத்த சகோதரர் மாங்கே, மங்கோலியப் பேரரசின் கானாக ( பேரரசனாக) பொறுபேற்றார்.
இதையடுத்து, வடசீனா முழுவதையும் ஆட்சி செய்யும் பொறுப்பை குப்லாய்க்கு, மாங்கே வழங்கினார். மேலும், தென் சீனாவை ஆண்டுவந்த சாங் அரசு மீது போர் தொடுத்து, அதை கைப்பற்றும்படியும் குப்லாயின் அண்ணன் மாங்கே கேட்டுக்கொண்டார். இதையடுத்து, 1259ல் சாங் மரபு அரசுக்கு எதிராக போர் தொடங்கியது. அதில், பேரரசன் மாங்கே கொல்லப்பட்டார். இதையடுத்து, அடுத்த கானாக (பேரரசனாக) குப்லாயின் இன்னொரு சகோதரரான ஆரிக் புகா, அறிவிக்கப்பட்டார். ஆனால், இதை குப்லாய் ஏற்றுக்கொள்ளவில்லை. போட்டி அரச மன்றத்தை கூட்டி, தான் தான் அடுத்த கான் என்று அறிவித்துக்கொண்டார் குப்லாய். விரைவிலேயே, அண்ணன் ஆரிக் மற்றும் குப்லாயக்கு இடையே அதிகார யுத்தம் வெடித்தது. நான்கு ஆண்டுகளாய் நடைபெற்ற உள்நாட்டு போரில், குப்லாய் வென்றார்.




இதையடுத்து, புதிய பேரரசனாக பொறுப்பேற்ற குப்லாய், தென்சீனாவின் மீது மீண்டும் போர் தொடுத்தார். இதில், கவண் (catapults) தொழில்நுட்பத்தை முறையை பயன்படுத்தி, பெரும் பெரும் கற்பாறைகளை வீசி யுத்தம் தொடுத்தார்.


இதில் சாங் கோட்டையின் மதில் சுவர்கள் தகர்க்கப்பட்டு,  சாங் ராஜவம்ச படைகள் சிதறடிக்கப்பட்டன. 1271ல்,  யுவான் ராஜவம்சம் என்ற புதிய அரச மரபை சீனாவில் தோற்றுவித்தார் குப்லாய். இது சீன மரபுப்படியும், அதன் நிர்வாக முறையையும் உள்ளடக்கியதாக இருந்தது. 5 ஆண்டுகளாக நடந்த போர்களில், 1,30,000 வீரர்களை உடைய சாங் படைகளை ஒட்டுமொத்தமாக தோற்கடித்து, 1276ல் முழு சீனாவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் குப்லாய் கான். அதற்கு முன்னர், சீனா பத்துக்கும் மேற்பட்ட தேசங்களாக சிதறிக்கிடந்தது.  தாங் அரசமரபுக்கு பின் சீனாவை ஒன்றுபடுத்திய பெருமையை யுவான் அரசு பெற்றது.
டாடுவை (தற்போதைய பெய்ஜிங்), தலைநகரமாக்கி, குப்லாய் கான் சீனாவை ஆண்டார்.  அவருடைய ஆட்சியில், வெளிநாடுகளில் உள்ள அறிவியல் வளர்ச்சிகளை சீனாவுக்குள் கொண்டுவந்தார். உட்கட்டமைப்பு, சாலைகள், வெளிநாட்டு வணிகம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்தார். சீன பெரும் கால்வாயின் நீளத்தை அதிகப்படுத்தி, வேளாண்மையில் முன்னேற்றத்தை கொண்டு வந்தார். நெடுஞ்சாலைகளை மேம்படுத்தியதுடன், பொதுமக்கள் உணவையும் தானியங்களையும் சேமிக்கப் பெரிய பானைகளை அரசு செலவில் அமைத்தார். இலவச மருத்துவமனைகளைக் கட்டியதாலும், அனாதை விடுதிகளைக் கட்டியதாலும். உணவை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்தளித்ததாலும், குப்லாய் கானின் ஆட்சி  மக்களுக்கு உகந்ததாக இருந்தது என்று பிரபல வரலாற்று ஆசிரியரான மார்க்கோ போலோ இருந்ததாக தனது பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். 1271லிருந்து 1368 வரை இவர் தோற்றுவித்த யுவான் அரசவை ஆட்சியில் நீடித்தது.
இன அடிப்படையில் நான்கு பிரிவுகளாக மக்களை பிரித்து குப்லாய் கான் ஆட்சி புரிந்தார். முதல் அடுக்கில், மங்கோலியர்களும், இரண்டாம் அடுக்கில் சீனர்கள் அல்லாத ஆசியர்களும், மூன்றாம் அடுக்கில் வட சீன மக்களும், நான்காம் அடுக்கில் தென்சீன மக்களும் வைக்கப்பட்டிருந்தனர். அதற்கேற்பவே ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.  வியட்நாம், பர்மாவையும் வரையிலும் தனது ஆட்சியை விரிவுப்படுத்திய குப்லாய் கான், 1294ல் உயிரிழந்தார்.
அவருக்கு பின் வந்த யுவான் அரசர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருந்ததனர். யுவான் அரசின் இறுதிக்காலம் பஞ்சம், அதிகாரச் சண்டை, பொது மக்களின் வெறுப்பு போன்றவற்றுக்கு ஆளாகியிருந்தது. யுவான் அரசர்கள் மங்கோலிய மரபுடையவர்களாக இருந்தபோதிலும் சீனக் கலாச்சாரத்தைப் பின்பற்றிச் சீனர்கள் ஆகிவிட்டதாக மங்கோலியர்கள் கருதினார்கள். மேலும், யுவான் அரசர்கள் சீன இனத்தவரிடமும் செல்வாக்கை இழந்தார்கள். இதனால், உறுதியற்ற அரசாக யுவான் அரசு மாறிப்போனது. யுவான் அரசர்களின் நிர்வாக சீர்கேட்டால் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. பல சட்டவிரோதக் கும்பல்கள் தோன்றி மக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கினார்கள். குழப்பங்களும் கிளர்ச்சிகளும் நடந்தன. மக்களின் அதிருப்தி வெடிக்கத் தொடங்கியது. ஜூ யுவான்ஜாங் (Zhu Yuanzhang) என்னும் விவசாயி தலைமையில் மக்கள் திரண்டார்கள். மங்கோலிய யுவான் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
↔மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்