ஒரு திருட்டு, இரு நாடுகளின் பகை


திருட்டால், இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வந்து பார்த்திருப்போம். ஏன் இரு ஊர்களுக்கும் இடையேகூட சண்டை மூண்டிருக்கும். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பெரும் பகை தோன்றக் காரணமாக அமைந்துவிட்டது என்று சொன்னால், நம்ப முடிகிறதா?
ஆம், ஒரு நகை திருட்டுச் சம்பவம், செளதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையே 20 ஆண்டுகளாக, தீராப் பகையை ஏற்படுத்தியிருக்கிறது.
1989ல், செளதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த, ஃபைசல் இப்னு ஃபஹத் என்ற இளவரசரின் வீட்டில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டெக்காமோங் என்பவர், வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள், அரச குடும்ப நகைகளைத் திருடிக் கொண்டு, நாட்டை விட்டு ஓடிவிட்டார் அந்த டெக்காமோங். அவர் திருடிச் சென்ற நகைகளின் எடை 90 கிலோ. அவற்றுள் விலை மதிப்புமிக்க நீல வைரமும் அடக்கம்.
குற்றவாளியைக் கைது செய்த தாய்லாந்து அரசு, டெக்காமோங்கிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்து, செளதி இளவரசருக்கே மீண்டும் அனுப்பி வைத்தது. ஆனால், நகையைச் சரிபார்த்த இளவரசருக்கு, அதிர்ச்சியோ அதிர்ச்சி. பெரும்பாலும் போலி நகைகளே அனுப்பப்பட்டிருந்தன. மேலும், விலையுயர்ந்த நீலக்கல் வைரத்தையும் காணவில்லை. தாய்லாந்து அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்தான், உண்மையான நகைகளை எடுத்துக்கொண்டு, போலி நகைகளை மாற்றி வைத்துவிட்டதாக, செளதி இளவரசர் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக நீலக்கல் வைரம், தலைமைப் போலீஸ் அதிகாரி சலோரிடம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, தாய்லாந்துக்கு, செளதி அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தாய்லாந்தில் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னரும்கூட, யார் இந்தக் கொலையைச் செய்தார்கள், நீலக்கல் வைரம் எங்கே என்பது குறித்து, தாய்லாந்து அரசு முறையான விசாரணையைச் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செளதி அரசு, தாய்லாந்திலிருந்து வந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்தது. எந்த அளவுக்குத் தெரியுமா? 1989ல் செளதியில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். ஆனால், இன்று 100க்கும் குறைவாக ஆக்கப்பட்டுவிட்டது.
தாய்லாந்து நாட்டினருக்கு விசா கொடுப்பதைப் படிப்படியாக குறைத்து, அவர்களை வேலைக்கு அமர்த்துவதையே கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தி விட்டது செளதி. ஒரு திருட்டு, இரு நாடுகளிடையே பெரும்பகையை மூட்டி விட்டது.
இவற்றைவிட முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். செளதி இளவரசர் வீட்டில் திருடினாரே, அந்த டெக்காமோங் என்ன ஆனார் தெரியுமா? புத்த துறவியாக மாறிவிட்டார். 2016 மார்ச்சில் தன் 65வது வயதில் துறவு பூண்டுவிட்டார்  டெக்காமோங். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘நீலக்கல் வைரம் திருடியதே என் குடும்பம் அழிந்து போனதற்கு காரணம். அதன் சாபம் என்னை விடுவதாக இல்லை. நான் செய்ததற்கு பிராயச்சித்தமாய் நான் சாமியாராக போகிறேன்’ என்பதுதான்.
– மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்