29 ஆண்டுகள் போரிட்ட ஒற்றை வீரர்



இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்தது. ஆனால், 1974ம் ஆண்டு வரை போரிட்ட ராணுவ வீரரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரூ ஒனோடா. இரண்டாம் உலகப்போர் முடிந்து 29 ஆண்டுகளாகியும், அது தெரியாமல், தொடர்ந்து போரில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். விந்தையான இந்நிகழ்வு, சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.

ஜப்பானைச் சேர்ந்த ஹிரூ ஒனோடா, சீனா வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டு இருந்தார். அவருக்கு 20 வயதான போது, ஜப்பான் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும்படி அழைப்பு வந்தது. நாட்டுக்குச் சேவை செய்யும் ஆர்வத்தில், ஒனோடாவும் சம்மதித்தார். உளவு பார்த்து, எதிரி நாட்டு தகவல்களைத் திரட்டும் பணியில் அவர் அமர்த்தப்பட்டார். மேலும், சிறு சிறு குழுவாக பதுங்கி, திடீர் தாக்குதல் நடத்தும் கொரில்லா போர் முறையிலும் அவருக்குச் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. அவரது பயிற்சி முடிந்த பிறகு, எதிரி நாடான பிலிப்பைன்சின் ஆளுகைக்கு உட்பட்ட லுபாங் தீவுக்கு, ஜப்பானிய அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டார்.

தளபதியின் கட்டளை

‘அங்கு ஏற்கனவே இருக்கும் நம் ஆட்களோடு இணைந்துகொள்ள வேண்டும். மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட சிறு சிறு குழுவாக பிரியுங்கள். போரில் என்ன நிலை வேண்டுமானாலும் வரலாம். உணவெல்லாம் தீர்ந்தாலும், தேங்காய்களை மட்டுமாவது உண்டு உயிர் வாழ வேண்டும். நமது ஆட்களின் எண்ணிக்கை அடியோடு குறைந்து, எதிரிகளால் பிடிக்கப்பட்டு விடுவோம் என்ற சூழ்நிலை வரலாம். அப்போது, எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்யக்கூடாது. கண்டிப்பாக அதற்கு அனுமதி இல்லை. 5 ஆண்டுகளானாலும் சரி, 10 ஆண்டுகளானாலும் சரி; என் தலைமையில் படைகளோடு அங்கு வந்து, தீவை கைப்பற்றுவோம்’ என்று ஒனோடாவிடம் சொல்லியனுப்பினார், படைத்தளபதி யோஷிமி தனிகுச்சி.

பதுங்கிய படை


அதை மனத்தில் ஆழப்பதியச் செய்து கொண்டு, லுபாங் தீவுக்கு போன ஒனோடா, அங்கு ஏற்கனவே இருந்த ஜப்பான் ராணுவ வீரர்களோடு சேர்ந்து கொண்டார். எதிரிகளின் விமான தளவாடங்களை, ஆயுதக்கிடங்குகளை கைப்பற்ற வேண்டும், உளவுத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று பல திட்டங்கள் போட்டிருந்தார் ஒனோடா. அவரின் எண்ணத்துக்கு மாறாக, நேச நாட்டு படைகளின் கை ஓங்கியது. இதனால், அங்கிருந்த ஜப்பான் வீரர்கள் குழுக்களாகப் பிரிந்து மலைகளை நோக்கி ஓடி பதுங்கிக்கொண்டனர். 1945ல், ஒனோடாவின் குழுவில், ஊய்ச்சி அகாட்சு, சியோச்சி ஷிமாடா, கின்ஷிச்சி கொசூக்கா ஆகியோரோடு சேர்ந்து, நான்கு பேர் இருந்தார்கள். அவர்களிடம் கொஞ்சம் ஆயுதங்களும், வாழைப்பழம், அரிசி ஆகிய உணவும் இருந்தன.

சரணடைந்த ஜப்பான்


ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதை தொடர்ந்து, ஆகஸ்ட் 15, 1945ல், ஜப்பான் படை, நேச நாட்டு படையிடம் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்தச் செய்தி ஒனோடாவின் குழுவினருக்குத் தெரியாது. அவர்கள் உணவுத்தேவைக்காக, ஊருக்குள் புகுந்து உள்ளூர்வாசிகளை தாக்கி, கால்நடைகளையும், தானியங்களையும் கொண்டு சென்றனர். மேலும், எதிரிப்படைகளுக்கும் கொரில்லா யுத்த முறையில் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து, ஜப்பான் சரணடைந்து விட்டது என்பதை புரியவைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. போர் முடிவுற்றது என்பதை தெரிவிக்கும் நோட்டீஸ்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. இதைப்பார்த்த ஒனோடா குழுவினர் ஜப்பான் சரணடைந்துவிட்டதாக நோட்டீஸ் சொல்லும் செய்தி பொய்யானது என்று கருதினர். இதையடுத்து, பிலிப்பைன்ஸ் அரசு, போயிங் விமானம் மூலம் செய்தித்தாளில் வந்த செய்திகள், புகைப்படங்கள், துண்டுப்பிரசுரங்களை எல்லாம் மலைக்காடுகளில் தூக்கியெறிந்தது.

‘படைத்தளபதி வருவார்’


அதைப் பார்த்த ஒனோடாவுக்கு, தெளிவு பிறப்பதற்கு பதிலாக சந்தேகம் வலுவடைந்தது. எனினும், அந்த குழுக்களில் இருந்த ஒருவரான அகாட்சு மட்டும் எதிரிகளிடம் சரணடைந்தார். அதன்பின்னர், 5 ஆண்டுகள் கழித்து, ஒனோடா குழுவில் இருந்த ஷிமாடா எதிரிப்படைகளால் கொல்லப்பட்டார். இப்போது, ஒனோடா மற்றும் கொசூக்கா ஆகிய இருவர் மட்டும் எஞ்சியிருந்தனர். இப்படியே, 17 ஆண்டுகள் உருண்டோடின. 1972ல், கொசூக்கா எதிரிகளால் கொல்லப்பட்டார். இப்போது, ஒனோடா மட்டும் தன்னந்தனியாக இருந்தார். எனினும், படைத்தளபதி யோஷிமி தனிகுச்சி சொன்ன வார்த்தைகளை மீற அவருக்கு விருப்பம் இல்லை. படைத்தளபதி சொன்னபடி, நிச்சயம் படைகளோடு அவர் வருவார் என்று நம்பினார்.

முடிவுக்கு வந்த பிடிவாதம்


என்ன சொல்லியும் வெளிவராத ஒனோடாவை தேடி, 1974ல் ஜப்பான் நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் நாரியோ சுசூகி பயணப்பட்டார். ஓராண்டு தேடியலைந்து ஒருவழியாக ஒனோடாவை சுசூகி கண்டறிந்தார். ஒனோடாவிடம், நாரியோ சுசூகி நடந்தவற்றைச் சொன்னார். உண்மையில் ஜப்பான் சரணடைந்து விட்டது என்பதற்கான எல்லா ஆதாரங்களையும் பார்த்த போது, ஒனோடாவுக்கு உலகமே இருண்டு போனது. ஜப்பான் தோற்றுவிட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எதற்காக, 30 பிலிப்பைன்ஸ் மக்களை கொன்றோம்; 100க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தினோம் என்று நினைத்தபோது, அவருக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, 1975 மார்ச் 10ல், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னினாண்டிடம் ஒனோடா சரணடைந்தார். அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜப்பானுக்கு சென்ற ஒனோடாவுக்கு ராஜமரியாதை கிடைத்தது. 30 ஆண்டு சம்பளமும் வழங்கப்பட்டது. ஆனால், ஜப்பானின் நிலையைக் கண்ட ஒனோடாவுக்கு, மனம் வெதும்பியது. தாம் ஒரு வல்லரசு நாடு என்ற பெருமையை இழந்த ஜப்பான் , உலக பேராதிக்க சக்திகளிடம் மண்டியிட்டு விட்டதாக கருதினார். இதனால், ஜப்பானில் இருந்து வெளியேறி பிரேசில் நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.

ஜப்பானில் கல்விப்பணி

1980ல், ‘ஜப்பானில், தேர்வில் தோற்ற மாணவன், ஆத்திரத்தில் பெற்றோரை கொலை செய்தான்’ என்ற செய்தியை ஒனோடா படித்ததும் அதிர்ச்சியடைந்தார். மாணவர்களின் மனநிலை பலவீனமடைந்து வருவதன் அறிகுறிதான் அந்தச் செய்தி என்று கருதினார். இதனால், 1984ல் மீண்டும் ஜப்பானுக்கே சென்ற ஒனோடா, ‘மாணவர்களுக்கான இயற்கை கல்வி’ என்ற பள்ளிக்கூடத்தை நிறுவினார்.

மாணவர்களுக்கு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் போதித்து, தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொடுத்தார். இதுதவிர, 1996ல் பிலிப்பைன்ஸ் தீவுக்கு சென்ற அவர், ‘ காரணமில்லாமல், 30 ஆண்டுகள் போர் புரிந்து, உள்ளூர் மக்களுக்கு தீங்கிழைத்து, அவர்களின் உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துவிட்டேன். அந்தத் தவறுக்குப் பரிகாரமாக, கல்விப் பணிக்காக 4 லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’ என்றார்.


போதனைகள்
 ஒருமுறை என் தாயிடம், ‘எனக்கு இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது. அவநம்பிக்கை அடைந்து விட்டேன். எனவே, தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு என் தாய், ‘ மகனே, என் வயிற்றுக்குள் நீ இருந்தாய். அப்போது, என்னிடம் இந்த உலகுக்கு வர வேண்டும், உலகைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று சொன்னாய்; அதனால்தான், உன்னை பெற்றேடுத்தேன்; பாலூட்டினேன். வாழ்வதற்காகத்தான் இங்கு வந்தாயே தவிர சாவதற்கு அல்ல.’ என்று சொன்னார். இந்த எளிய உண்மையை புரிந்தபின்னர், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். 
 பெற்றோர்கள், கடைசிவரை பிள்ளைகளோடு இருக்கப்போவதில்லை. எனவே, தனித்து இயங்கும் அளவுக்கு. அவர்களை மனதைரியம் உள்ளவர்களாக வளர்ப்பதே, பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

↔மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்