ஏன் இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள்தொகை அதிகம்?

பொதுவாக, இந்தியாவின் பிரச்னைகளை பட்டியலிடுங்கள் என்று சொன்னால், பெரும்பாலானவர்கள் மக்கள்தொகை என்று சொல்வார்கள். உலக மக்கள்தொகையில், 36 சதவீதம் பேர் இந்தியாவிலும் சீனாவிலும் மட்டுமே உள்ளனர்.  அதாவது, இருநாடுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை 260 கோடி. ஆனால், உலக நிலப்பரப்பில், இந்தியா மற்றும் சீனாவின் பங்கு வெறும் 8.2 சதவீதம் தான். குறைந்த நிலப்பரப்பில், எப்படி இவ்வளவு பெரிய மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட முடியும்? இதற்கு, உலகில் மற்ற நாட்டினருக்கு வாய்க்கப்பெறாத புவியியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிடைத்ததே காரணம்.
வற்றாத நதிகள்
அதிக மக்கள்தொகை உயிர் வாழ, நல்ல தண்ணீர், வளமிக்க மண் மற்றும் நல்ல சீதோஷ்ண நிலை தேவை. பெரிய நாகரிகங்கள் எல்லாம், நதிகளை மையமாக வைத்தே தோன்றியிருக்கின்றன.
10 நதிகள், அன்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களில் உறைந்து கிடக்கின்றன.
5 நதிகள் மழைக்காடுகளில் உள்ளன.
உலகின் முக்கிய 7 நதிகளில், 4 இந்தியா மற்றும் சீனாவில் உள்ளன. (யாங்சே, மஞ்சள் நதி, கங்கை, பிரம்மபுத்திரா)
உலகின் அதிக வளமிக்க இந்தோ–-கங்கை சமவெளிப் பரப்பின் அளவு 6.3 கோடி ஏக்கர்கள்.
சீனாவின்  சிச்சுவான் பேசின் சமவெளிப்பரப்பை உருவாக்கும் யாங்சே (Yangzte) ஆறு, உலகின் மூன்றாவது பெரிய நதி. மஞ்சள் நதி, வடசீனா சமவெளிப் பரப்பை உருவாக்க உதவுகிறது.
சீனாவில் மட்டும் 50,000 ஆறுகள் விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளன.
சிறந்த நிலங்கள் 
உலகின் 20 சதவீத விவசாய நிலபரப்பு இந்தியாவிலும், சீனாவிலும்உள்ளன.
அதிக விவசாய நிலங்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்திலும், சீனா நான்காவது இடத்திலும் உள்ளன.
உலகின் 50 சதவீத அரிசி உற்பத்தியை இந்தியா மற்றும் சீனா செய்கின்றன.
உலகின் 30 சதவீத கோதுமை உற்பத்தியை, இந்தியாவும் சீனாவும் செய்கின்றன.
உலகில் 5 ல் 1 பங்கு கலோரிகளை தரும் உணவாக அரிசிதான் உள்ளது.
வலிமையான அரசுகள்
கி.மு.., 250ல் வாழ்ந்த அசோகர், வலிமையான பேரரசை உருவாக்கினார்.
கி.மு., 200ல் கின் பேரரசு, ஒட்டுமொத்த சீனாவை ஒருங்கிணைத்து, புதிய தேசத்தை கட்டியெழுப்பியது.
பண்டைய காலத்தில் இருந்தே, உலகின் 60 சதவீத பொருளாதாரத்தை, இந்தியா மற்றும் சீனாவே கொண்டிருந்தது.
நவீனத்துக்கு முந்தைய புராதன மற்றும் இடைக்கால கட்டத்தில், இந்தியாவே உலகின் பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்தது.
போக்குவரத்து வசதி
சீனாவிலிருந்து பாரசீகம் வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு நடைபெற்ற தரை வழி வர்த்தகத்தில் முக்கியமான பங்கை, சில்க் சாலை வகித்தது.
சில்க் சாலை, சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா என்று நீண்டது.  இந்த வாய்ப்பு, அமெரிக்காவுக்கோ, ஆப்பிரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ கிடையாது.
இரும்பு அரண்கள்
மக்கள் தொகை அழிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, படையெடுப்பு, அடுத்து கொள்ளை நோய்.
ஐரோப்பிய படையெடுப்பாளர்கள்,  வளமிக்க அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி அமெரிக்கர்களை கடுமையான அழிவுக்கு உள்ளாக்கினார்கள்.
மங்கோலியப் படையெடுப்பாளர்கள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பகுதிகளில் படையெடுத்து பெரும் நாசத்தை விளைவித்தனர். ஈரானின் 90 சதவீத மக்கள் தொகையை துடைத்தெறிந்தனர்.
இந்தியாவைச் சுற்றி இயற்கை எல்லைகளாக இருந்த இமய  மலைகளும், பாலைவனங்களும், காடுகளும், கடல்களும், படையெடுப்பாளர்களுக்கு சவாலாக இருந்தது.
ஐரோப்பிய நாடுகளில், 6ம் நூற்றாண்டில் பரவிய 'ஜஸ்டினியன் பிளேக்' (Justinian Plague) என்ற கொள்ளை நோய், 50 சதவீத மக்களை காலி செய்தது. (5 கோடி பேர் )
14ம் நூற்றாண்டில், 'பிளாக் டெத்' (Black Death) என்ற பிளேக் நோய் ஏறத்தாழ ஐரோப்பிய மொத்த மக்கள் தொகையில் அறுபது சதவீதத்தை (5 கோடி பேர்) ஒழித்து கட்டியது.
17ம் நூற்றாண்டில், சீனாவின் மக்கள் தொகை 15 கோடியாகவும், இந்தியாவின் மக்கள்தொகை 10 கோடியாகவும் இருந்தது.
வரலாறு நெடுகிலும், உலகின் 60 சதவீதம் பேர் இந்தியாவிலும், சீனாவிலுமே வாழ்ந்து வந்தனர்.
நவீன காலம் 
தொழிற்புரட்சிக்குப் பிறகே, உலகின் மற்ற நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்தது.
ஐரோப்பாவில் 18ம் நூற்றாண்டு தொடங்கி 20 நூற்றாண்டுக்குள், 10 கோடியிலிருந்து, 40 கோடியாக மக்கள் தொகை வளர்ச்சி அடைந்தது.
1800ல் 53 லட்சமாக இருந்த அமெரிக்க மக்கள் தொகை, 1920ல் 10 கோடியாக வளர்ச்சி அடைந்தது.
காலனிய படையெடுப்பால், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி பாதிப்படைந்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு, தொழில்முன்னேற்றம் ஏற்பட்டதால், இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
1978க்கு பிறகு, சீனாவில் அரசு கொள்கையால், மக்கள்தொகை வளர்ச்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.  (0.5 வளர்ச்சி விகிதம்)
இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி, சீரான வேகத்திலேயே இருக்கிறது. (ஆண்டுக்கு 1.2 சதவீத வளர்ச்சி)
– மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்