பிரமிக்க வைக்கும் இந்திய ரயில்வே

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று இந்திய ரயில்வே. இது 170 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்களால், ரயில்வே கட்டமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அது மிகப் பெரிய அளவில் வளர்ந்து, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது.


துரித போக்குவரத்துக்கான நிர்பந்தம்

பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கும், போர் காலங்களில் ராணுவ தளவாடங்களை இடம் மாற்றம் செய்யவுமே, 19ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ரயில் போக்குவரத்தை உருவாக்கினர். அந்த காலகட்டத்தில், இந்தியாவில் பருத்தி பெருமளவில் விளைந்தது; அவற்றை ஏற்றுமதி செய்ய, துறைமுகங்களுக்கு கொண்டு போக வேண்டும். அதற்கு, சாலை வழி போக்குவரத்தே பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், 1840ல் இங்கிலாந்துக்கு, அமெரிக்காவில் இருந்து சப்ளையான பருத்தி, சில காரணங்களால் குறைந்தது. இதனால், இங்கிலாந்து, இந்தியாவின் பக்கம் பார்வையை திருப்பியது. இந்திய விவசாயிகளிடம் நிறைய பருத்தி கிடைத்தது. ஆனால், அதை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல, துரித போக்குவரத்து வசதி இல்லை.

இதனால், ரயில்வே போக்குவரத்தை துவங்க, இங்கிலாந்து வணிகர்கள் முடிவு செய்தனர். இதற்காக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியுடனும், ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஏப்ரல் 16, 1853-⁠ல் பம்பாயில் இருந்து (தற்போது மும்பை) போர்பந்தர் துறைமுகப் பகுதியில் உள்ள தானே நகருக்கு, முதல் பயணிகள் ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது; இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் 34 கிலோமீட்டர்.

பிரிட்டிஷ் எஞ்சினியர்கள் மேற்பார்வையில், ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் ரயில்பாதை அமைக்க பாடுபட்டனர். ஒரே நேரத்தில் 30,000 பேர்கூட வேலை பார்த்தனர். செங்குத்தான மலைமேல் ஏறும் ஜிக்-ஜாக் இருப்புப் பாதை, குகை பாதைகளை அமைத்தல் என்று பல்வேறு சாதனைகளை செய்தனர். நாளடைவில், ரயில் பாதை அமைக்கும் பணிகள் விரிவடைய ஆரம்பித்தன.

சொகுசான முதல் வகுப்பு

19ம் நூற்றாண்டில், முதல் வகுப்பு பயணகளுக்காக, தனி ரயில் பெட்டிகள் இருந்தன. அதில் பஞ்சு மெத்தை படுக்கை, குளியல் அறை, கழிப்பறை வசதி, காலை தேநீர் முதல் மாலை உணவு வரை, அவ்வப்போது சிற்றுண்டி வழங்கும் பணியாளர்கள், குளுகுளுவென்று இருப்பதற்காக ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்ட பாத்திரத்திற்கு மேல் பொருத்தப்பட்ட காற்றாடி, சவரம் செய்துவிடுபவர், நூலகம் என்று ஏராளமான வசதிகள் நிறைந்திருந்தன. ‘இவ்வளவு தூரம் பயணித்த போதிலும் களைப்பே தெரியவில்லை’ என, 1860-ம் ஆண்டு ரயிலில் பயணித்த லூயீ ரூஸ்லீ என்பவர் கூறினார். இந்த ரயில பெட்டிகள் பெரும் பணவசதி படைத்தவர்கள் பயணிக்க மட்டுமே ஏற்றதாக இருந்தது.

இன்றைய ரயில்வே



இந்தியாவில் ரயில்கள்: 7,500

ரயில் நிலையங்கள்: 6,867


பயணி, சரக்கு பெட்டிகள்: 2,80,000

இருப்பு பாதை துாரம்: 1,07,969 கிலோமீட்டர்


ரயில்வே துறையில் நடப்பு ஆண்டில் எதிர்பார்க்கும் வருமானம்: 1.84 கோடி ரூபாய்.

ரயில்வே பணியாளர்கள்: 16 லட்சம்.

தினமும் இயங்கும் ரயில்கள்: 11,000.

தினமும் ரயில் பயணிக்கும் துாரம்: 60,000 கி.மீ.

ஒரு நாளில் பயணம் செய்வோர்: 2.5 கோடி

உலகில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ள பெரிய கம்பெனி

உலகின் மிகப்பெரிய சொத்துள்ள நிறுவனங்களில் ஒன்று.


தெரியுமா?
அதிக துாரம் பயணிக்கும் இந்திய ரயில்

• விவேக் எக்ஸ்பிரஸ்.

கன்னியாகுமரி – திப்ரூகர்

தொலைவு 4,286 கிலோ மீட்டர்.

பயண நேரம் 82:30 மணி.

• இந்தியாவின் மிகப் பழமையான தற்போதும் இயங்கக்கூடிய ரயில் இன்ஜின் ஃபேரி குயின்.

இது, 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

• இந்திய ரயில்வே துறையில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

••••••••
ஹரப்பா செங்கல்லில் ரயில்வே

இந்தியாவின் முதல் ரயில் இயக்கத்துக்கு பின், மூன்றே ஆண்டுகளுக்குள், பாகிஸ்தானிலுள்ள கராச்சி – லாகூர் இடையே இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. தண்டவாளங்களை அசையவிடாமல் நிலைத்திருக்க உதவும் வகையில் ஜல்லிக்கற்கள் அங்கு கிடைக்கவில்லை; ஆனால் ஹரப்பா கிராமத்திற்கு அருகே சுடுசெங்கலகள் கிடைத்தன. ஜல்லிக் கற்களுக்குப் பதிலாக இவற்றை உபயோகிப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஸ்காட்லாந்து எஞ்சினியர்கள் கருதினர். புதையுண்டு கிடந்த செங்கற்களை பயன்படுத்தி, தண்டவாளத்தை அமைத்தனர். அதன் பின்னர், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், அது சிந்து சமவெளி நாகரிக புதைபொருள் என்பதை கண்டுபிடித்தனர். இந்நாகரிகம், 4,000-⁠க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையானது என்பதும் நிரூபிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்