இயற்கை எழில்மிகு இலங்கை தேசம்



அழகும் வனப்பும்மிக்க தேசங்களில் ஒன்று இலங்கை. நாட்டின் தென்பகுதி பொன்னிற கடற்கரைகளையும், மத்திய பகுதி பசும் மலைகள், மழைக்காடுகளையும் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை, அதன் செழிப்பு, பன்முக கலாசாரம் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் சிறப்புமிக்க பூலோக ரீதியான அமைப்பால், பல நூற்றாண்டுகளாக வர்த்தகங்கள், பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகிறது. ராமாயணத்தில், ராவணனால் சீதை கடத்திச் செல்லப்படும் இடம் இலங்கைதான். சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும், தமிழர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும், மூன்று முக்கிய இனக்குழு மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர்.

விஜயன் தொடங்கி வைத்த வரலாறு



இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது. இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய வரலாற்று நூலாக மகாவம்சம் கருதப்படுகிறது. அதன்படி, 2500 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் கலிங்க நாட்டில் இருந்து, அந்நாட்டு இளவரசனான விஜயன் துரத்திவிடப்பட்டான்; அங்கிருந்து கிளம்பி, தனது எழுநூறு தோழர்களுடன் விஜயன் இலங்கைக்கு வந்திறங்கினான். அதிலிருந்து, அந்நாட்டின் வரலாறும் ஆரம்பமாகிறது.

விஜயன் வம்சாவளியினரிடம், மகிந்த தேரர் என்பவர் புத்த மதத்தை அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து, அனுராதபுரம் மற்றும் பொலனறுவையில் நாகரிகம் வளர்ச்சியடைந்தது. பொலனறுவை அரச வீழ்ச்சிக்குப் பின்னர், இலங்கையில் பல்வேறு அரசுகள் தோன்றின.

இலங்கை வரலாற்றில் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட ஆட்சிகள் நிலவியுள்ளன. அனுராதபுர ஆட்சிக்காலம், பொலனறுவை ஆட்சிக்காலம், யாப்பகுவ ராஜாங்கம், தம்பதெனிய ராஜாங்கம், யாழ்ப்பாண அரசாங்கம், சீத்தவக்கை அரசாங்கம், கோட்டை அரசாங்கம், கண்டி பேரரசு என்ற அடிப்படையில் ஆட்சிகள் நடைபெற்றன. அப்போது, புத்த, இந்து, இஸ்லாமிய சமயங்கள் வளர்ச்சியடைந்தன.

ஆட்சி அதிகாரங்களில், புத்தர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் கலந்தே இருந்தனர். புத்த மன்னர்களின் ஆட்சிகளில், தூதுவர்களாகவும், அமைச்சர்களாகவும், அரண்மனை வைத்தியர்களாகவும் முஸ்லிம்களும், தமிழர்களும் இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன.

அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை, 181 அரசர்களும், அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். 16வது நூற்றாண்டின் இலங்கை நாட்டின் சில கடலோரப் பகுதிகள், போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக்காரர்களின் கைவசம் இருந்தது. 1815ல், முழு இலங்கையும் வெள்ளையர்களின் கைவசம் சென்றது. பிரிட்டன் காலனிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை அவர்களின் பொருளாதார சுரண்டல், அடிமைத்தனம், மதமாற்றம் உள்ளிட்ட கொடுமைகளை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஆயுதப் புரட்சிகள் நடந்தன. தம் நாட்டை காக்க, சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடினர். இறுதியாக 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது.

ஏகாதிபத்தியத்துக்கு அடிமையான இலங்கை


போர்த்துகீசிய மாலுமி பிரான்சிஸ்கோ அல்மெய்தா தலைமையில், 1505ல் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கி, பின்னர் கொழும்பு கடற்கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தகத் தளத்தை போர்த்துகீசியர் அமைத்தனர். அப்போது, இலங்கைப் பகுதிகளை ஏழு அரசுகள் ஆண்டு வந்தன. அவர்களிடையே நிலவிய அரசியல் உட்பூசல்களை வளர்த்து, 1517ல் தமது பலத்தை போர்த்துகீசியர்கள் அதிகப்படுத்திக் கொண்டனர். அவர்கள், புத்தர்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதமாற்றம் செய்தனர். போர்த்துகீசியர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, கண்டி பேரரசை ஆண்ட ராஜாவான விமலதர்மசூர்யா முதலாம் மன்னர், டச்சுக்காரர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இதையடுத்து, போர்த்துகீசியர்கள் மீது டச்சுக்காரர்கள் போர் தொடுத்தனர். 1660ல் கண்டியை தவிர, ஒட்டுமொத்த நாட்டையும் டச்சுக்காரர்கள் கைப்பற்றினர். போர்த்துகீசியர்கள் செய்த கொடுமையைவிட, பெரும் கொடுமையை டச்சுக்காரர்கள் கட்டவிழ்த்து விட்டனர்.

1796ல், பிரிட்டன் கப்பல்களை இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் நிறுத்த டச்சுக்காரர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, போர் தொடுத்த ஆங்கிலேயர்கள், முதலில் திரிகோணமலையையும், பின்னர் மற்ற இலங்கை பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். 1802ல், டச்சு மற்றும் பிரிட்டானியர்களிடையே ஒப்பந்தம் நடந்தது. அதில், ஆட்சிப் பொறுப்பை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைப்பது என்று முடிவு எட்டப்பட்டது. ஸ்ரீலங்கா எனும் பெயர் சிலோன் என்று மாற்றப்பட்டது. இலங்கையின் மத்திய பகுதியில் பெரும் பலத்துடன் இருந்த கண்டி பேரரசை, பல்வேறு தந்திரங்கள், போர்கள் மூலம், 1815ல் பிரிட்டானியர்கள் கைப்பற்றினர். பின்னர், ஆங்கிலேயர்கள் தமிழ் அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே நிலவி வந்த பகையை உரமூட்டி வளர்த்தனர். இருதரப்புக்குமான உறவுகள் சீர்கெடத் தொடங்கியது. ஏறத்தாழ 443 ஆண்டுகள், இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை




ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் சுமுகமாக இருந்த சிங்களவர்- – தமிழர் உறவு, காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக விரிசல் கண்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, சிங்களர், தமிழர் மத்தியில் தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. இருதரப்பிலும், அரசியல், பொருளாதாரம், வியாபாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இனமோதல் வெளிப்படத் தொடங்கியது. தங்கள் சமுதாயத்துக்கு பிற சமூகத்தால் இழைக்கப்பட்ட அநியாயங்களை சரிசெய்யப் போவதாகக்கூறி, இரு தரப்பு தலைவர்களும் மாறி மாறி வெறுப்பு பேச்சுகளை வெளியிட்டனர்.

1958ல் ஆரம்பித்த இனக்கலவரங்கள் பின்னர் அடிக்கடி நிகழ்த்தொடங்கின. 1983 ஜூலை 23ல், தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு, தமிழின ஆயுதக்குழுவான விடுதலைப்புலிகள் (Liberation Tigers of Tamil Eelam – -LTTE) ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர். இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்; சொத்துகளை இழந்தனர். நிம்மதி குலைந்து, அழகான இலங்கை சின்னபின்னமானது.

2009 மே மாதம், ஆயுதமேந்திப் போராடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு, இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து, போர் முடிந்து இலங்கையில் சமாதானம் திரும்பியது. போரால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு குடியேற்றம் செய்யப்பட்டனர். இலங்கை அரசு தற்போது வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், சிங்கள தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகள், நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பெரும் இடையூறாய் இருந்து வருகின்றன.

 ↔– சிவசக்தி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்