வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி மாவீரன் நெப்போலியன்


1769- – 1821


முடியாது என்ற சொல், என் அகராதியில் இல்லை

மன்னர் குடும்பத்தில் இல்லாமல், ஏழைக் குடும்பத்தில் பிறந்து, திறமையாலும், உழைப்பாலும் பிரான்ஸ் மன்னரானார் நெப்போலியன். சிறுவயது முதலே பயம் அறியாமல் வளர்ந்தவர். அரசின் சலுகை பெற்று, ராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்த பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பினார். பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார்.

பள்ளிப் படிப்பை 16 வயதில் முடித்து, பிரெஞ்சு ராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். அங்கு சிறப்பாக செயல்பட்டதால், படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல், இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தார். இதன் மூலம், நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர், பாரீசில் ஆட்சியைக் கவிழ்த்து, 1804ம் ஆண்டு, தனது 35வது வயதில், பிரான்ஸ் மன்னனாக, முடிசூட்டிக் கொண்டார்.

நெப்போலியன் அடுத்தடுத்து தொடுத்த போர்களால், இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால், மற்ற ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்துடன் வர்த்தகம் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால், ரஷ்யா இதை மீறியது. இதனால், ரஷ்யா மீது, 6 லட்சம் வீரர்களுடன் படையெடுத்தார். ரஷ்யாவில் குளிர்காலம் வரவே, பல்லாயிரக்கணக்கான பிரஞ்சு வீரர்கள் கடுங்குளிரை தாங்க முடியாமல் மாண்டனர். வெறும் 20,000 வீரர்களுடன் பிரான்சுக்கு அவர் திரும்பினார். அந்த தருணத்தைப் பயன்படுத்தி, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்சை தாக்கின. போரில் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன். எல்பா என்ற தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார். சில மாதங்களில் அங்கிருந்து தப்பித்த நெப்போலியன், மீண்டும் பிரான்சுக்கு வந்து, படை திரட்டினார்.

இரண்டு ஆண்டுகளில், பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும், நெப்போலியனுக்கு எதிராக போர் புரிந்தன. பெல்ஜியத்தின் வாட்டர்லு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில், இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் ராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைத்தது. அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு, வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. 1821ம் ஆண்டு மே 5-ம் தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது.

•••••••••••••••••••

பெட்டி செய்தி

பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, பிரான்சில் அமைதி நிலவியது. அவரது பணிகள்:

*பொருளாதார, அரசியல், சட்டத்துறை சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார்.

*பிரான்ஸில், ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார்.

*வீதிகளை திருத்தி அமைத்து, புதிய வீதிகளை உருவாக்கினார்.

* நகரில் தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார்.

* வரி வசூலிக்கும் முறைகளில், மாற்றங்களை கொண்டு வந்தார்.

* பிரான்சில் வங்கியை உருவாக்கினார்.

* முக்கியமாக, சிவில் சட்டங்களை உருவாக்கினார். சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்றும், பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்