எளிமையின் அடையாளம் - பேரரசன் அவுரங்கசீப்


அரசு நிர்வாகத்துறையில் ஊழலை ஒழிக்க முயன்ற, இந்திய மன்னர்களில் தலையாயவர் ஒளரங்கசீப். 1658 முதல் 1707 வரை, ஆப்கானிஸ்தான் காபூல் முதல் தமிழகம் வரை மிகப் பெரும் பரப்பை ஆட்சி செய்தார். முகலாய மன்னர்களில் அக்பரும்,ஒளரங்கசீப்பும் தான், நீண்ட காலம் (49 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர்கள்.


அரியணை ஏறிய ஆலம்கீர்


ஒளரங்கசீப்பின் தந்தை, மன்னர் ஷாஜகான். இவர், நோயில் விழுந்ததும், மூத்த மகன் தாராஷிகோ, ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார். நான்கு மகன்களில் தாராஷிகோவுக்கே ஷாஜகானின் ஆதரவு இருந்தது. ஷாஜகான் இறந்து விட்டதாகவும், அவரது மறைவை அறிவிக்காமல் தாராஷிகோ முறைகேடாக ஆட்சி புரிவதாகவும், வதந்தி பரவியது. இதனால், வங்கத்தில் ஆளுநராக இருந்த ஷா சுஜா, தன்னைத்தானே அரசராக அறிவித்துக் கொண்டு, பேரரசைக் கைப்பற்ற படையெடுத்தார்.

அப்போது தக்காணத்தை ஆண்டஒளரங்கசீப், குஜராத்தை ஆண்ட முராத் பக்ஷ் உடன் ஒப்பந்தம் செய்து, படைகளை இணைத்தார். அதாவது, பேரரசை சரிபாதியாக பிரித்துக் கொள்வது என ஒப்பந்தம். ஷா சுஜாவை,ஒளரங்கசீப் வீழ்த்திக் கொன்றனார். ஆக்ராவைக் கைப்பற்றிய அதேவேகத்தில், டில்லி சென்று தாராஷிகோவையும் வென்றார்ஒளரங்கசீப். ஒப்பந்தப்படி முராத் பக்ஷுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லைஒளரங்கசீப். கைது செய்து மரண தண்டனை அளித்தார்.

தந்தை ஷாஜகான் ஆடம்பரமாக வாழ்ந்தார். வரிப்பணத்தை செலவு செய்து, தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்ட கட்டடங்கள் கட்டினார். இதை,ஒளரங்கசீப் எதிர்த்தார். ஆக்ரா கோட்டையில், தந்தை ஷாஜகானை சிறை வைத்தார். ‘பிரபஞ்சத்தை ஆளப் பிறந்தவன்’ எனும் பொருள் தரும், ‘ஆலம்கீர்’ என்ற பட்டப்பெயருடன் 1658-ல் அரியணை ஏறினார்.


ஒளரங்கசீப்

1618 –1707

*அதிக உயரம் இல்லாத, ஒடிசலான உடல்வாகு உள்ளவர்.

* வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்.

* மது, கேளிக்கை, இசை போன்றவற்றுக்குத் தடை விதித்தார்.

* இசையையும், இசைக்கலைஞர்களையும் பிடிக்காதே தவிர, அற்புதமாக வீணை வாசிப்பார்.

* போர்க்களம் உட்பட எந்தச் சூழலிலும், ஐந்து வேளை தொழத் தவறியதில்லை.

* அரசு கஜானாவிலிருந்து சொந்த செலவுக்கு பணம் எடுத்ததில்லை.

* தொப்பிகளைத் தனது கையால் செய்து, விற்பனை செய்து வந்தார்.

* அழகான கையெழுத்தில் குரானைப் பிரதி எடுத்து, விற்பனை செய்தார்.


தொப்பி விற்ற பணம்

ஔரங்கசீப் உயிலில் எழுதியிருந்த தகவல்.

என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம், நான்கு ரூபாய்களும் இரண்டு அணாக்களும் உள்ளன. அதைக்கொண்டு, என் உடல் மீது போர்த்துவதற்கான துணியை (கஃபன்) வாங்கிக் கொள்ளுங்கள். குரான் எழுதி விற்ற வகையில், என்னிடம் 305 ரூபாய் உள்ளது. அந்தப் பணத்தை, ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்து விடுங்கள். என் முகத்தை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் என்மீது கருணை காட்ட அது உதவும். என் உடலை ஆடம்பரம் இன்றி அடக்கம் செய்யுங்கள்.

இவ்வாறு உயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.



பொருளாதார வல்லரசு

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கஸ் மேடிசன் (Angus Maddison), உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். இவர், பண்டைய பொருளாதார வரலாறுகளை அலசுவதில் வல்லுநர். 'உலகப் பொருளாதாரம் -ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு ; வரலாற்று ரீதியான புள்ளிவிவரங்கள்'(The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2) எனும் நூலில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

‘கி.பி.1ம் ஆண்டில் உலகின் மொத்த வருமானத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் பங்கு 52.9 சதவீதம். கி.பி.1000ல் உலக வருமானத்தில், இந்தியாவின் பங்கு 33 சதவீதம். ஆனால், அது கி.பி.1500ல் 24.5 சதவீதமாகக் குறைந்தது; சீனாவிடம் இந்தியா முதலிடத்தை இழந்தது.

1600களில் மொகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில், இங்கிலாந்தின் மொத்தச் செல்வத்தைவிட, இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்தது. எனினும், சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில், ஐரோப்பா இருந்தது. கி.பி.1700-ல் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலம். அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அதனால், அவரது ஆட்சிக்காலத்தில், மீண்டும் இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக மாறியது. (24.4 சதவீதம்). ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு, 1750-ல், சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்தின் காலனி ஆதிக்க நாடாக மாறிய பிறகு, பொருளாதார ரீதியில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு, இன்னமும் தடுமாறியும் தள்ளாடியும் வருகிறது.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்