உலகின் கனவு தேசம் - ஐக்கிய அரபு அமீரகம்


1. உலகின் உயரமான கட்டடம் எங்கு உள்ளது?
2. உலகின் மிகப்பெரும் செயற்கைத் தீவு எங்கு அமைந்துள்ளது?
3. கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் லம்போர்கினி, ஃபெராரி, பென்ட்லி போன்ற கார்களை, சாதாரண போலீஸ்காரர்களும் பயன்படுத்தும் நாடு எது?
4. தங்கக்கட்டிகளை வினியோகம் செய்ய, ஏ.டி.எம். மெஷின்களைக் கொண்ட நாடு எது?
5. ரோபோ போலீசை முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
6. உலகின் பெரிய ஆப்பிள் ஸ்மார்ட்போன் விற்பனை நிலையம், சீஸ்கேக் தொழிற்சாலை, காலணி விற்பனை நிலையங்கள் உள்ள நாடு எது?
சந்தேகமே இல்லாமல், நம்பர் 7, குறுக்குச் சந்து விவேகானந்தர் தெரு, துபாய் அமைந்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக நாடுதான்.
அபுதாபி, துபாய், ஷார்ஜா, உம்மல் குவைன், ராசல் கைமா, அஜ்மன், ஃபுஜைரா என்று ஏழு அமீரகங்களை கொண்ட நாடுதான் ஜக்கிய அரபு அமீரகம். அரபு தீபகற்பத்தில், பாரசீக வளைகுடாவின் தென்முனையில் அமைந்திருக்கிறது ஐக்கிய அரபு அமிரகம் (யு.ஏ.இ.). இதன் எல்லைகளாக, ஓமன், செளதி அரேபியா.
இதன் வரலாற்றை அறிந்துகொள்ள, இப்போதிருந்து 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம். அப்படியே போனால், யு.ஏ.இ.நாட்டில் என்ன தெரியும்? எதுவுமே தெரியாது... வெறும் மணல் மட்டும்தான் தெரியும். இது நகைச்சுவை அல்ல. இன்று யு.ஏ.இ., நாட்டின் அபார வளர்ச்சியை அறிந்தவர்களுக்கு, அன்றைய நிலையை நம்புவது கடினம்தான்.
18ம் நூற்றாண்டில், அமீரக வளைகுடா பகுதிகளை, பனியாஸ் குடும்பத்தினர் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அமீரகங்களிலேயே பெரிய அமீரகம் அபுதாபிதான். இங்கு அமைந்திருந்த கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு, 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே, முக்கிய தொழில் முத்துக்குளித்தல்தான். இதுதவிர, மீன்பிடித்தல், ஒட்டக வளர்ப்பு, பாலைவனச் சோலைகளில் பேரீச்சம் மற்றும் காய்கறி விவசாயமும் உண்டு. எந்த சுவாச உபகரண வசதியும் இல்லாமல் ஆழமாகச் சென்று கடலில் முத்துக்குளிக்க வேண்டும். போனால், திரும்பி வருவார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வளவு ஆபத்தான தொழில். எவ்வளவு ஆபத்தோ அந்தளவுக்கு லாபமும் இருந்தது.
இந்தத் தொழில், வெகுநாள் நீடிக்கவில்லை. 1900களின் தொடக்கத்தில், ஜப்பானில், செயற்கை முத்து வளர்ப்புத் தொழில் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் வேகமாய்ப் பரவியது. இது துபாய், அபுதாபி கடற்கரை கிராம மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. வளைகுடா முத்துகளுக்கு மதிப்பு எதுவுமற்றுப் போனது. மறுபுறம் தொற்றுநோய் போன்ற சோதனைகளும் அம்மக்களை வாட்டியெடுத்தன. ஏராளமானோர் இறந்தனர், இடம்பெயர்ந்தனர். அபுதாபியில் 80 ஆயிரமாக இருந்த மக்கள்தொகை, மக்களின் இடப்பெயர்வால், 2 ஆயிரமாகச் சுருங்கியது. மருத்துவமனைகள் இல்லை, படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை, தொழில்கள் இல்லை என்று ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, அந்நாட்டு மக்கள் மாட்டிக்கொண்டிருந்தனர்.
அண்டை நாடான ஈரானில், 1908ம் ஆண்டிலேயே பெட்ரோல் கண்டறியப்பட்டு, பரபரப்பான நவீன யுகத்தை நோக்கி, அவர்கள் போய்க்கொண்டிருந்தனர். ஆனால், துபாயிலும், அபுதாபியிலும் 1960 வரை எண்ணெய் தட்டுப்படுவதாக இல்லை. இதுபோதாதென்று, அமீரகங்களின் கடற்பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை, உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்டு வந்த பிரிட்டன், 1968ல், அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
பிரிட்டனோடு உடன்படிகை போட்டிருந்த ஒன்பது அமீரகங்கள், ஒற்றுமையாக நீடித்திருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. அவர்களுக்கிடையே நிலவிய உட்பூசல் மற்றும் போட்டி காரணமாக, அமீரகங்கள் எல்லாம் தனித்தனி நாடாகும் நிலை காணப்பட்டது. 1971 ஆகஸ்ட் மாதம், பஹ்ரைன் அமீரகம் விடுதலை பெற்றது. அதே ஆண்டு செப்டம்பரில், கத்தாருக்கு விடுதலை கிடைத்தது.
இப்படியான ஒரு இக்கட்டான சூழலில், அபுதாபியின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஷேக் சையது, யு.ஏ.இ. நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றார். தொலைநோக்குப் பார்வை கொண்ட அவர், அமீரகங்களின் ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்ந்தவராக இருந்தார். இவருடைய கடும் முயற்சியால், சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, சார்ஜா, துபாய், மற்றும் உம்மல் குவைன் என்பன இணைந்து, ஐக்கிய அரபு அமீரகம் என்னும் கூட்டமைப்பு உருவானது. ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) என்ற பெயரில், 1971 டிசம்பரில் தேசம் மலர்ந்தது. 1972ல், ராஸ் அல்-கைமா அமீரகமும் தன்னை இணைத்துக்கொண்டது. ஏற்கெனவே, ஒப்பந்த நாடுகளாக இருந்த கத்தாரும், பஹ்ரைனும் இணையவில்லை.
ஐக்கிய அரபு நாட்டை உருவாக்கிய ஷேக் சையதுவின் பெரும் உழைப்பால், உலக அரங்கில் தனித்துவமான இடத்தைப் பிடித்தது யு.ஏ.இ. முத்துக்குளிப்பு தொழில் ஒழிந்து, எண்ணெய் கண்டறியப்பட்ட நிலையில், அதைத் திறம்பட பயன்படுத்தி, வெற்றுப் பாலைவனங்களை சோலைவனங்களாக மாற்றிய யு.ஏ.இ.யை, உலகின் கனவு தேசம் என்று அழைத்தால் தவறில்லை.



கடற்கரை கொள்ளையர்களும், பிரிட்டனின் ஒப்பந்தமும்

பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் வருவதென்றால், அமீரக கடற்கரைப் பகுதி வழியாகவே வந்தாக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் அமீரகங்களின் கடலோரப் பகுதிகள், கொள்ளைக்கும் கடத்தலுக்கும் பெயர்பெற்றிருந்தன. அங்கு கடற்கொள்ளையர்கள் பதுங்கியிருந்து, அந்த வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி கொள்ளையடித்து வந்தனர். இது, பிரிட்டனின் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. எனவே, அமீரகங்களை ஆண்டு வந்த பனியாஸ் ஆட்சியாளர்களோடு, பிரிட்டன் 1835ல் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தியது. அதன்படி, அமீரகங்களை ஒட்டியிருந்த வளைகுடா கடற்பகுதிக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றது. மேலும், பிரிட்டனைத் தவிர, வேறு எந்த நாட்டுடனும் அமீரகங்கள் ஒப்பந்தம் செய்யக்கூடாது, என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வெளிவிவகாரமும் பிரிட்டனின் பொறுப்பில் சென்றது. ஆனால், 1968ம் ஆண்டில் பிரிட்டன் பேரரசு, தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பாரசீக வளைகுடா கடல்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
•••••••••••••••••••••••••••••••

புவியியல்
ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இந்நாடு ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்தையும், கரையோர தரிசு நிலங்களையும், கிழக்கு எல்லையில் மலைகளையும் கொண்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடா பகுதியை, அரபிக் கடலுடன் இணைக்கும் உலகின் மிக முக்கியமான ஜலசந்திகளுள் ஒன்றான, ஹோர்முஸ் ஜலசந்தியை எல்லையாக கொண்டுள்ளது.
பொருளாதாரம் 
வளைகுடா பகுதியில், செளதி அரேபியா, இரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு யு.ஏ.இ.,தான். இதன் உள்நாட்டு உற்பத்தியில், பெட்ரோல் மற்றும் எரிவாயு ஏற்றுமதிதான் 33 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இன்று உலகின் அதிக வாழ்க்கைதரமிக்க நாடுகளில் ஒன்றாக யு.ஏ.இ., திகழ்கிறது.
மக்கள்தொகை 
மக்கள்தொகையில் அமீரகத்தினர் 19% மட்டுமே. இங்கு வாழ்பவர்களில்  80 சதவீத மக்கள் பிற நாட்டவர்கள். 93 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகையில், 78 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள்தான். அதிலும் 50% வீதமானவர்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
கலாசாரம்
இஸ்லாமிய நாடான யு.ஏ.இ.,ன் அதிகாரப்பூர்வ மொழி அரபு. கலாசார ரீதியாக மற்ற அரபு நாடுகளோடு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. எனினும் பெருமளவில் ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதோடு, நவீன கலாசார விழுமியங்களை உள்வாங்கிக்கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.




↔– மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்