விமானத்திலிருந்து குண்டு வீசிய முதல் வீரன்



காலந்தோறும் போர் செய்யும் முறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. கல்லை வைத்து, கவணை வைத்து, கத்தியை வைத்து, அம்பை வைத்து, துப்பாக்கியை வைத்து என்று மாற்றங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இந்த வகையில், விமானத்தில் இருந்து எதிரிகளின் மீது குண்டெறியும் முறையை அறிமுகப்படுத்திய ஓர் இளைஞனைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

தற்போது, வெளிநாட்டுப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில்தான், அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் அரங்கேறியது. அது 1911ம் ஆண்டு. வட ஆப்பிரிக்க நாடான லிபியா, ஓட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தது. அப்போது, லிபியாவை உரிமை கொண்டாடும் போட்டியில், துருக்கியப் பேரரசுக்கும், இத்தாலியப் படைகளுக்கும் சண்டை உக்கிரமாக நடந்தது.

அப்போது, போர்க்களத்தில் விமானியாகப் பணியாற்றிய இத்தாலிய இளைஞன் கியூலியோ கவோட்டி, தன் தந்தைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான். ‘தந்தையே, நான் ஒரு புது முடிவை எடுத்துள்ளேன். இதுவரை ராட்சத பலூன்களில் இருந்து மட்டுமே குண்டுகளை எறிவது வழக்கம். இப்போது, நான் ஆகாய விமானத்திலிருந்து துருக்கியப் படைகள் மீது குண்டுகளை எறியப் போகிறேன். எனது அதிகாரிகளிடமோ, சகாக்களிடமோ எனது திட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முயற்சி வெற்றியடையும்போது, சொல்லிக் கொள்ளலாம். ஒவ்வொரு குண்டும் ஒன்றரை கிலோ. இரண்டு பெட்டிகள் நிரம்ப இப்போதுதான் எனக்கு குண்டுகள் வந்து சேர்ந்திருக்கின்றன. வானிலை தெளிவான பின், விமானத்தைக் கிளப்ப வேண்டியதுதான்.’ என்று கடிதம் எழுதினான்.

அதன்படியே, லிபியாவின் திரிபோலி நகர் அருகே உள்ள அய்ன் சாரா என்ற பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருந்த எதிரிகளின் கூடாரம் மீது, விமானத்திலிருந்தபடியே மூன்று குண்டுகளைப் போட்டான். அந்தக் குண்டுகள், எதிர்பார்த்த அளவுக்கு துருக்கியப் படைகளுக்கு சேதத்தை விளைவிக்கவில்லை. எனினும், அவனது முயற்சியை இத்தாலிய ஊடகங்கள் பெரிதும் பாராட்டி எழுதின. ரைட் சகோதரர்கள் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிக் காட்டி, சரியாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் அரங்கேறியது. போர் முறையில் புதிய வழியைக் கண்டுபிடித்த இளைஞன் கியூலியோ கவோட்டி கொண்டாடித் தீர்க்கப்பட்டான். அன்று அந்த இளைஞன் காட்டிய வழி, நவீன வான்வழிப் போர் முறையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால், அது ஹிரோஷிமா வான்வழி அணுகுண்டு வீச்சு சம்பவம் அளவுக்கு சேதங்களை விளைவிக்க வல்லவவை என்பதைக் கற்பனைகூட செய்திருக்க மாட்டான் அந்த இளைஞன்.

– மோகன்

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்