இத்தாலிய சாணக்கியன் மாக்கியவெல்லி



நவீன அரசியல் சிந்தனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர், மாக்கியவல்லி (Niccolo Machiavelli). இவர், இத்தாலியிலுள்ள பிளாரன்சில், 1469ம் ஆண்டில் பிறந்தார். 1498ல், பிளாரன்ஸ் குடியரசில் சேர்ந்து, சில முக்கிய அதிகார பொறுப்புகளை வகித்தார். பிளாரன்ஸ் நாட்டின் தூதுவராக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தார். இத்தாலியிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார்.

பிளாரன்ஸ் குடியரசு, 1512ம் ஆண்டில் கவிழ்க்கப்பட்டது. ஆட்சியைக் கைப்பற்றிய மெடிசி மரபினர், மாக்கியவல்லியை சதிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர். எனினும், மன்னிப்பு கேட்டு மன்றாடியதால், அதே ஆண்டில் அவர் விடுதலையடைந்தார். அதன் பின்னர், பிளாரன்சுக்கு அருகிலிருந்த சான்காசியோனோ என்ற ஒரு பண்ணையில் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

மாக்கியவல்லியின் இறுதிக்காலம் வரை, இத்தாலி பல சிறிய சிற்றரசுகளாகப் பிளவுபடடுக் கிடந்தது. அதே சமயம், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்றவை ஒருங்கிணைந்த வலிமையான நாடுகளாக விளங்கின. இத்தாலி பண்பாட்டில் உயர்ந்து விளங்கிய போதும், ஏன் பலமிக்க நாடாக உயர முடியவில்லை என்ற கேள்வி மாக்கியவல்லியைத் தீவிரமாக யோசிக்க வைத்தது. இதற்குரிய தனது பதிலை, அடுத்த 14 ஆண்டுகளில், ஏராளமான புத்தகங்களாக எழுதினார். அவற்றில், 'இளவரசன்' (The Prince), 'டைட்டஸ் லிவியசின் முதல் பத்து ஏடுகளின் மீதான ஆய்வுரை', 'போர்க்கலை' 'பிளாரன்ஸ் வரலாறு' போன்றவை புகழ்பெற்றவை.

‘ஓர் அரசன், தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னால், வஞ்சகம், சூழ்ச்சி, பொய் போன்றவற்றை கையாளத் தயங்கக்கூடாது; கருணையே இல்லாமல் மக்களை அடக்க வேண்டும்’ என்பது மாக்கியவல்லியின் அடிப்படை அரசியல் தத்துவம். அவருடைய புத்தகங்கள் வழியாக, சர்வாதிகார அரசியல் கருத்துகளுக்கு வடிவம் அளித்தது, அன்றைய அறிஞர்கள் வட்டத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதனால், பிற அறிஞர்கள் மாக்கியவல்லியை, 'மனித உருக்கொண்ட பேய்' என்று வசை பாடினர்.

எனினும், அவருடைய சிந்தனைகள், நவீன அரசியல் உலகில் இன்றளவும் தாக்கம் செலுத்தி வருவதை மறுக்க முடியாது. இவருடைய தத்துவ நூல்கள் அனைத்தும் படிப்பதற்கு மிக எளிதானவை. சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி, மாக்கியவல்லியின் நூலைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டே உறங்கினாராம். ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் போன்றோரும் மாக்கியவல்லியால் கவரப்பட்டவர்கள்தான். 1527ல் மாக்கியவல்லி தனது 58வது வயதில் காலமானார்.



‘மாக்கியவல்லியம்’
அரசியலில், தந்திரம் மற்றும் மோசமான சிந்தனைகளை குறிக்க மாக்கியவல்லியம் (MACHIAVELLISM) என்ற வார்த்தை பயன்படுகிறது. மாக்கியவல்லியின் சிந்தனைகளில் சில:
அதிகாரத்தை அடைய விரும்பும் ஆட்சியாளர், நியாய தர்மத்தைப் பார்க்கக் கூடாது.
ஆட்சியைப் பிடித்ததும், ஓர் அரசன் எல்லாக் கொடுமைகளையும் (மக்களின் எதிர்கால நன்மைக்காக) உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும். படிப்படியாக செய்யக்கூடாது. ஆனால், குடிமக்களுக்கான நன்மைகளை மட்டும் சிறிது சிறிதாகத்தான் செய்ய வேண்டும்.
அன்புக்கு ஆட்படுவதைவிட, பயத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. அன்பெனும் சங்கிலி அறுந்துவிடும். ஆனால், தண்டனை பயம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தேவைப்பட்டால், ஆட்சியாளர் நம்பிக்கை துரோகம் செய்யலாம். அதை நியாயப்படுத்த ஏதேனும் காரணங்களைச் சொன்னால், மக்கள் நம்பிவிடுவார்கள்.
ஆட்சியாளர் நடைமுறையில் சீற்றங் கொள்பவராகவும், ஈவு இரக்கமற்றவராகவும் இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்