கம்போடியாவின் ஹிட்லர் ‘போல் பாட்’
தெற்கு ஆசியாவின் மிகக் கொடிய கொலைகாரர் என்று அறியப்படுபவர் சர்வாதிகாரி போல் பாட். இவர், கம்போடியா நாட்டை 1975லிருந்து 1979 வரை ஆட்சி செய்தார். கம்போடியாவில், முற்றிலும் வித்தியாசமான கம்யூனிச ஆட்சி முறையை போல் பாட் புகுத்தினார். இவருடைய ஆட்சியில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சம் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
போல்பாட்(POL POT), 1925ல் கம்போடியாவின் கோம்போங் தோம் மாநிலத்தில் பிறந்தார். இயற்பெயர் ஸலோத் ஸார். பின்னாளில், போல் பாட் என்ற பெயரில் அறியப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் கம்போடியா அப்போது இருந்தது. பிரான்ஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால், கம்போடிய மக்களிடையே அரசுக்கு எதிரான அலைவீசியது. இந்திய சீனப் போரின் முடிவில், கம்போடியா முழுச் சுதந்திரத்தைப் பெற்றது. கம்போடியாவில் நரோத்தம் சிஹனோக் என்ற அரசரின் கீழ் முடியாட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1949ல் தன் 20வது வயதில் கம்போடியாவை விட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் சென்று, ரேடியோ தொழில்நுட்பத்தைக் கற்க முயன்றார் போல் பாட். எனினும், பாரீஸில் படிப்பை விட்டு விட்டு, புரட்சிகர மாணவ சங்கங்களில் இணைந்து கம்யூனிஸ்டாக அவர் மாறினார். பின்னர், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த, ஹோ சி மின் மற்றும் சீன கம்யூனிஸ்டான மாவோ சே துங்கோடும் இணைந்து அரசுக்கு எதிரான கலக நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டினார். கிமர் ரோக் (Khmer Rogue) என்று பெயரிடப்பட்ட கம்யூனிச ராணுவத்தை உருவாக்கிய அவர், 1975 ஏப்ரல் மாதம் கம்போடியத் தலைநகர் 'நாம்பென்'னைக் கைப்பற்றினார். ஆட்சியைக் கைப்பற்றிய சில மணி நேரத்தில், நாட்டின் பெயரைக் கம்பூச்சியா என்று பெயர் மாற்றம் செய்தார் போல் பாட்.
கற்காலத்தை நோக்கி
அதே நேரத்தில், நாட்டின் பெருநகரங்கள் சிறு நகரங்கள் அனைத்தையும் காலி செய்து, மக்களை கிராமங்களை நோக்கி விரட்டும்படி, ராணுவத்துக்கு கட்டளை இட்டார் போல் பாட். இதையடுத்து, குறு, பெரு நகரங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அடித்து விரட்டப்பட்டனர். நாட்டின் விவசாயப் பகுதிக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். கம்பூச்சியாவில் பணப் புழக்கம் முற்றாகத் தடை செய்யப்பட்டது. பணப் பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சிறியது முதல் பெரியது வரையிலான சந்தைகள் யாவும் ஒழித்துக் கட்டப்பட்டன. வங்கிகள் மூடப்பட்டன.
மிகவும் கொடூரமான கொள்கைகள் மூலம், மக்களை கற்கால சமூகத்தை நோக்கி அழைத்துச் செல்ல, போல் பாட் முயற்சி செய்தார். பாரீஸ் நகரில் படித்திருந்தாலும், கல்வியை அறவே வெறுத்தார் போல் பாட். நாட்டின் விவசாய நிலங்களுக்கு விரட்டப்பட்ட மக்கள் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட ஆயுத முனையில் நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர். குடும்பங்கள் ஒன்றாக வாழ அனுமதிக்கப்படவில்லை. கணவன் மனைவி பிரிக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். சிறார்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது.
அச்சுறுத்தப்பட்ட குடும்ப அமைப்பு
குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு, கம்யூனிசக் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு மூளைச்சலவை செய்யப்பட்டனர். நாட்டில் வாழ்ந்த புத்த பிக்குகளும், கிறிஸ்தவப் பாதிரியார்களும் கொல்லப்பட்டனர். முன்னாள் அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர். போல் பாட் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 60 ஆயிரமாக இருந்த புத்த பிக்குகளின் எண்ணிக்கை, அவருடைய ஆட்சி முடிவதற்குள் 3 ஆயிரமாக குறைந்தது. வியட்நாம், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கம்போடியா வந்து குடியேறிய சிறுபான்மையினர், தம் தாய்மொழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறித் தாய்மொழியைப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
முஸ்லிம் மதத்தினரான சாம் இன மக்கள் தமது மதம், மொழி, பண்பாட்டு அடையாளங்களை விட்டுக் கொடுக்க மறுத்தனர். போல் பாட் சாம் இனத்தவரைக் படுகொலை செய்வதில் தீவிரம் காட்டினார். 5 லட்சமாக இருந்த சாம் மக்கள் தொகை, சில ஆயிரங்களாகக் குறைக்கப்பட்டது. விவசாயப் பகுதிகளுக்கு விரட்டப்பட்ட பல்லாயிரக் கணக்கான முன்னாள் அரசு அதிகாரிகள், வர்த்தகர்கள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஹிட்லர் காலத்து யூதர்களை முடக்கிய முகாம்களுக்கு நிகராக அவை இருந்தன.
இப்படி அடைக்கப்பட்டவர்கள், சாகும் வரை விவசாயப் பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். நோயுற்றவர்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டனர். கடும் வேலை காரணமாக இறப்பு விகிதம் உயர்ந்தது. நோய், உணவுப் பற்றாக்குறை, பழக்கம் இல்லாத கடின வேலை, ராணுவ வீரர்களின் அடக்குமுறை, மலேரியா பாதிப்பு உள்ளிட்டவற்றால் உயிரிழப்பு அதிகமாகியது. கம்போடியாவில் நடந்த அத்துமீறல்களை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொள்ளவில்லை. கம்போடியாவின் அண்டை நாடான தாய்லாந்தின் வழியாகவே, கம்போடியாவில் நடந்த அநியாயங்கள் வெளியுலகிற்குக் கசிந்தன.
முடிவு கட்டப்பட்ட அநியாயம்
போல் பாட்டுக்கு சீனா ஆதரவளித்தது. கம்போடியா ராணுவ அதிகாரிகளுக்கு, சீனா சிறப்பு பயிற்சிகளை வழங்கியது. இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில், 1979ம் ஆண்டு ஜனவரியில், கம்போடியாவுக்குள் வியட்நாம் இராணுவம் புகுந்தது. அத்துடன் போல் பாட் ஆட்சி முடிவுக்கு வந்தது. வியட்நாம் ஆட்சியின் கீழ் நாடு ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது. வியட்நாம் வெளியேற்றத்தின் பிறகு ஐ.நா. தலைமையில் அமைதி நடவடிக்கைகளும் பொதுத் தேர்தல்களும் கம்போடியாவில் நடத்தப்பட்டன. பொதுத் தேர்தல்களுடன் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கம்போடியாவில் பரவலாக பல மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பில், 20 முதல் 30 லட்சம் பேர் போல் பாட் ஆட்சியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த போல் பாட், உலக நீதிமன்றத்தின் விசாரணையைச் சந்திக்கவேயில்லை. அவர் 1998, ஏப்ரல் 15ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

Comments
Post a Comment