பண்டைய ஒலிம்பிக் போட்டி
மல்யுத்தத்தில், தனக்கு எதிராக போட்டியிடுபவருடைய உடம்பின் மேற்பகுதியை மட்டும் இறுக்கமாக பிடிக்க எதிராளிக்கு அனுமதி இருந்தது; எழ முடியாதபடி மூன்று முறை எதிராளியை தரையில் சாய்த்து வீழ்த்துபவரே வெற்றி வாகை சூடியவராக அறிவிக்கப்பட்டார். மற்றொரு சுவாரஸ்யமான போட்டி, பான்க்ரேசன் (Pankration) சண்டை. இது, குத்துச்சண்டையும் மல்யுத்தமும் கலந்த போட்டி. முஷ்டியால் தாக்கி, எதிரியை தரையிலே வீழ்த்தி செயலிழக்கும்படி செய்வதும், பலப்பிரயோகம் செய்து அடிபணிய செய்வதுமே போட்டியாகும்.
மகுடம் சூட்டும் வெற்றி தேவதை
வெள்ளிப் பதக்கங்களோ, வெண்கலப் பதக்கங்களோ அன்று கிடையாது. இரண்டாவது இடமோ மூன்றாவது இடமோ நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, முதலிடம், முதலிடம், முதலிடம் மட்டும்தான். இதனால், நைக்கீ (வெற்றி என்பதன் கிரேக்க சொல்) அடைவதே களத்தில் இறங்குபவர்களின் ஒரே லட்சியம். விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு, ‘இலைகளால் ஆன கிரீடம்’. இறக்கைகள் உடைய நைக்கீ என்ற வெற்றி தேவதையே, போட்டியில் ஜெயித்த வீரருக்கு கிரீடத்தை அளிப்பதாக நம்பப்பட்டது. ஒலிம்பியாவில் நடந்த போட்டியில், வெற்றி பெறுவதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் உச்சபட்ச சாதனையாக கருதப்பட்டது.
ஒலிம்பிக் கிரீடங்கள், காட்டு ஒலிவ இலைகளால் செய்யப்பட்டன; இஸ்துமியன் போட்டி கிரீடங்கள், பைன் இலைகளாலும், பித்தியன் கிரீடங்கள், லாரல் இலைகளாலும், நிமியன் கிரீடங்கள், காட்டு செலரி இலைகளாலும் செய்யப்பட்டிருந்தன. மற்ற இடங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர்கள், திறமைசாலிகளை ஈர்ப்பதற்காக, வெற்றி பெறுவோருக்கு பணமுடிப்பையோ வேறு பரிசுப்பொருட்களையோ வழங்க முன்வந்தனர்.
விளையாட்டு வீரர்களால், அவர்கள் பிறந்த கிரேக்க சமஸ்தானங்கள் புகழ் பெற்றன; வெற்றியடைந்தவர்கள், அவர்களுடைய சொந்த ஊரில் வீர நாயகர்களாக கருதப்பட்டனர். வெற்றி வாகை சூடியவரின் வருகை, கோலாகலமான ஊர்வலத்தோடு கொண்டாடப்பட்டது. அந்த வீரனின் தைரியத்தைப் புகழ்ந்து, கவிஞர்கள் பாடல்களும் பாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பொது நிகழ்ச்சிகளில் முதன்மை மரியாதை கொடுக்கப்பட்டது; அதுமட்டுமின்றி மக்கள் அவர்களுக்கு பண உதவி செய்தார்கள்.
–மோகன்
பண்டைய சமூகத்தில் விளையாட்டுப் போட்டிகள்
முறையான விதிகளையுடைய மல்யுத்த விளையாட்டுகளில் ஈடுபடும் முரட்டு வீரன், பொதுவில் மிகவும் ஒழுக்கமானவனாக இருப்பான் என்று சொல்வார்கள். அதை அடிப்படையாக வைத்துத்தான், பண்டைய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. உலக கலாசாரங்களில், இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமானதாகவும், கட்டுக்கோப்பானதாகவும் மாற்ற, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பண்டைய கிரேக்க கலாசாரத்தில் (கி.மு.12 / கி.மு.9) நடத்தப்பட்ட போட்டிகள் குறித்த விளக்கம், விரிவாக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரேக்க கவிஞர் ஹோமரின் ‘இலியட்’ (iliad)என்ற காவியத்தில், இதைப் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அவருடைய சமூகத்தில் படை பலத்திற்கும், போட்டி விளையாட்டுகளுக்கும் பெருமதிப்பு கொடுக்கப்பட்டது. தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் மத நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாகவே, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில், கிரேக்கர்கள் தங்கள் நாடுகளிடையே நடைபெறும் மூர்க்கத்தனமான சண்டைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். போர் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, தம்முடைய வீரத்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம், வட்டத்தட்டு வீசுதல், ஈட்டி எறிதல், ரதம் ஓட்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெளிப்படுத்துவார்கள். போர் மனப்பான்மையை சமாதான மனப்பான்மையாக மாற்ற, அந்த விளையாட்டுப் போட்டிகள் பெரும் வாய்ப்பளித்தன. சண்டைகளில் வெற்றி பெற எந்தளவு ஊக்கம் காட்டப்பட்டதோ, அதே அளவு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் விழாவும், நிமியன் விழாவும் ஜீயஸ் (Zeus) என்ற தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டன; பித்தியன் விழா அப்போலோ தெய்வத்திற்கும், இஸ்துமியன் விழா பஸைடன் தெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டன. நாளடைவில், கிரேக்கர்கள் அனைவரும் கொண்டாடும் அளவுக்கு, அவை முக்கிய விழாக்கள் ஆயின. இந்த விழாக்களில், பிரார்த்தனைக்காக விலங்குகள் பலியிடப்பட்டாலும், தெய்வங்களை கௌரவிக்க, பிரமாண்டமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த விழாக்களில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒலிம்பியாவில் நடத்தப்படும், ஜீயஸ் தெய்வ மரியாதை விழா முக்கியமானதாக கருதப்பட்டது.
– -மு.கோபி
Comments
Post a Comment