இந்தியர்களை ஒன்றுபடுத்திய வங்கப்பிரிவினை



ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தில், திருப்புமுனையாக அமைந்த வரலாற்று சம்பவம், வங்கப்பிரிவினை. அதுவே, ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக, இந்திய மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வழிவகை செய்தது. இந்தியாவில் சுதேசி இயக்கம் தோன்ற முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அன்றைய வங்காளம், 8 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்ந்தது. வங்காளம் முழுவதும், ஆங்கிலேயர்களிடம் எதிரான தேசபக்த எழுச்சி அதிகம் இருந்தது. மக்கள் ஒன்றுபட்டு போராடுவதை சமாளிக்க முடியாத ஆங்கிலேய அரசு, அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தை கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப் பிரிப்பதாக, 1905 அக்டோபர் 16ல், வைஸ்ராய் கர்சன் அறிவித்தார். ஒடிஸாவுடன் இணைக்கப்பட்ட மேற்கு வங்காளம், 141,580 சதுர மைல் பரப்பளவையும் 5.4 கோடி மக்கள் தொகையும் கொண்டதாக அமைந்தது. இதில் இந்துக்கள் 4.2 கோடி பேர், முஸ்லிம்கள் 1.2 கோடி பேர்.

அஸ்ஸாமுடன் இணைக்கப்பட்ட கிழக்கு வங்காளம், 106,540 சதுர மைல்கள் பரப்பளவையும், 3.1 கோடி மக்கள் தொகையும் கொண்டதாக அமைந்தது. இதில் 1.3 கோடி பேர் இந்துக்கள், 1.8 கோடி பேர் முஸ்லிம்கள். இந்த அமைப்பின்படி, கிழக்கு வங்காளம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாற்றப்பட்டது.

ஆனால், இது வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸலிம்களையும் பிளவுபடுத்துவதாக அமைந்தது. வங்கப் பிரிவினையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்கிலேயர்கள் மதத்தின் அடிப்படையில், தங்களை பிரிக்க முயற்சிக்கின்றனர் என்பதை, வங்க மக்கள் உணர்ந்து கொண்டனர். இதனால், நாடு முழுவதும் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. தேசிய இயக்கம், நாளுக்கு நாள் வலுப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசியலில் பல திருப்பங்கள் நிகழ்ந்தன.

பெண்களும், மாணவர்களும் முதன்முறையாக, அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசிடம் பணிந்து செல்லும் வழக்கத்தை கைவிட்ட தலைவர்கள், எதிர்ப்பு போராட்டமே தீர்வு என்று, உறுதியாக முடிவெடுத்தனர். ஆங்கிலேய பொருட்களை புறக்கணிக்கும் சுதேசி இயக்கம் தோன்றி, ஆங்கிலேயரின் வியாபார சாம்ராஜ்யம் சரியத் துவங்கியது. குறைந்த பட்சம் 8 முதல் 20 சதவிகிதம் வரை, ஆங்கிலேயரின் வர்த்தகம் இழப்பை சந்தித்தது. பிரிவினைக்கு எதிரான போராட்டத்தையும், சுதந்திர வேட்கையையும் ஆங்கிலேயரால் அடக்க முடியவில்லை. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, முழு வெற்றி கிட்டவில்லை.

1905 முதல் 1911 வரை இடைவிடாது வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்துக்கு அடிபணிந்த ஆங்கிலேயர்கள், 1911ல் வங்க பிரிவினையை வாபஸ் வாங்கினர். இரு மாகாணங்களும், மீண்டும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டது. பட்டமேற்பு விழாவிற்கு இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், வங்கப் பிரிவினையை ரத்து செய்வதாக தனது பட்டமேற்பு நாள் உரையில், 1911, டிசம்பர் 11 அன்று அறிவித்தார். அதுமட்டுமல்ல; இந்தியாவின் தலைநகரை, கோல்கட்டாவில் இருந்து தில்லிக்கு மாற்றுவதாகவும் அறிவித்தார். மதவாத அடிப்படையில், 1905ல் இரண்டாகப் பிரிக்கப்பட்ட வங்காளத்தை, 1911ல் தொடர் போராட்டம் மூலம் மீண்டும் இணைக்க முடிந்தது, இந்திய வரலாற்றில் திருப்புமுனை சம்பவம்.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்