செங்கிஸ்கான் பேரரசு
செங்கிஸ்கான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பேரரசர். ஆனால், இன்று அவரைப் பற்றி படித்தாலும், பிரமிப்பும் மிரட்சியும் ஏற்படும். காரணம், அவரது போர்த்திறன், ஆளுமை மற்றும் வலிமை அத்தகையது.
சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அமைந்திருக்கும் வறண்ட பகுதியான மங்கோலியாவில் உள்ள டெல்லுங் போல்டாக் எனும் இடத்தில், 1162-ம் ஆண்டு பிறந்தார் செங்கிஸ்கான். அவரது இயற்பெயர் "தெம் மூ சின்". அவருடைய காலத்தில், மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. மாறாக, பல நாடோடிக் கூட்டங்களாக மங்கோலிய மக்கள் சிதறிக் கிடந்தனர். நாடோடி குழுக்களின் சண்டையில், தந்தையும் நண்பர்களும் கொல்லப்பட, 12 வயதிலேயே போருக்கு பழக்கப்பட்டார் செங்கிஸ். தனது, 40 வயதுவரை மங்கோலியரை அடக்கி, ஒரே இனமாக சேர்க்க அவர் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார். நாடோடிக் குழுக்களை ஒருங்கிணைத்து, ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்று செங்கிஸ் கனவு கண்டார்.
தன் துணிச்சலாலும், துடிதுடிப்பாலும் அவர் மங்கோலியப் பேரரசைக் கட்டமைக்க விரும்பினார். 1206-ல், மங்கோலிய இனக்குழுக்களை இணைத்து, மங்கோலியப் பேரரசை கட்டமைத்தார். மேலும், "செங்கிஸ் கான்" என்றும் தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதன் பொருள் "உலகத் தலைவன்".
அதன் பின்னர், வட சீனாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார், செங்கிஸ்கான். ஏற்கனவே, மங்கோலிய கொள்ளையருக்கு பயந்துதான் அவர்கள் சீனப் பெருஞ்சுவரையே எழுப்பியிருந்தார்கள். ஆனாலும் செங்கிஸ்கானின் படையெடுப்பில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு அது உதவவில்லை. அதற்குப் பிறகு, முழு ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்தார்.
அரேபியாவுக்குள் புகுந்து அங்குள்ள அரசைக் கைப்பற்றினார். பின்னர், தெற்கு ரஷ்யா. அதோடு கொரியா, உஸ்பெக், தஜிஸ், துர்கிஸ்தான், கச்சஸ், ஆர்மேனியா, ஜியார்ஜியா, குவைத் என அவரது வெற்றிப் பாதை தொடர்ந்துகொண்டே இருந்தது.
உச்ச கட்டமாக, ஐரோப்பாவில் நுழைந்து போலந்துவரை பிடித்தார். இப்படியாக, மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கான் அமைத்த பேரரசு நான்கு மடங்கு பெரியதாக இருந்தது. அதுமட்டுமல்ல, ஐரோப்பாவிற்குள் புகுந்து அவர்களை வென்று காட்டிய ஆசிய மாமன்னன் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக செங்கிஸ் மாறினார்.
ஆனால், இன்றைக்கு போல் அன்றைய ஐரோப்பா இல்லை. எங்கு பார்த்தாலும் வறுமை. இதனால், இந்த தரித்திர நாடுகளை வைத்துகொண்டால் நமது செல்வமும் போய்விடும் என சொல்லிவிட்டு திரும்பிவிட்டார் செங்கிஸ். மங்கோலிய பேரரசு, சீனத்தையும் ஐரோப்பாவையும் இணைத்ததன் மூலம், வறுமையில் வாடிய ஐரோப்பியர்களால் சீனத்திற்குள் வர முடிந்தது. இதன்பின்னரே, அங்கிருந்து டீ, காகிதம், வெடிமருந்து, மருத்துவம், விவசாயம் என பல நுட்பங்களை ஐரோப்பியர்கள் கற்றுக்கொண்டு முன்னேறினர்.
வெற்றிமேல் வெற்றி
செங்கிஸ்கானின் வெற்றிக்கு முக்கிய காரணம், அவருடைய ராணுவத்தைக் கையாளும் அறிவு. இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதில் உலகளவில் மிகையாக பாராட்டப்பட்டவர். மூன்று பிரிவாக வீரர்களை வைத்திருந்தார். ஒரு பிரிவு சண்டையிட்டால் இன்னொரு பிரிவு ஓய்வெடுக்கும், இன்னொரு பிரிவு மோதலுக்குத் தயாராக இருக்கும். நடமாடும் கூடாரங்கள், ஈட்டிப்படை, குதிரைப்படை என அவர் போர் நுட்பத்தில் கைதேர்ந்தவராக இருந்தார்.
செங்கிஸ்கானிடம், மத சகிப்புத்தன்மை இருந்தது எனவும், பல மதங்களின் மீது செங்கிஸ்கான் மதிப்பு வைத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. இஸ்லாம், புத்த மதக் கொள்கை, கிறிஸ்துவம் என பல மதங்கள் பற்றி கற்று அறிந்திருந்தார் செங்கிஸ்கான்.
தனது ஆட்சிக்குக் கீழ்ப்பட்டு இருந்த நகரங்களை, வேறு இனத்து நிர்வாகிகள், ஆட்சி செய்ய அனுமதித்தார். செங்கிஸ்கானின் மங்கோலிய சாம்ராஜ்யத்தில் பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த செங்கிஸ்கான், இந்தியா பக்கம் வரவில்லை. இதற்கு, இந்தியாவின் யானைப்படைக்கு அவர் அச்சப்பட்டார் என்றொரு காரணமும் கூறப்படுகிறது. அவருக்குப் பின் அவரது வாரிசுகள், மங்கோலியப் பேரரசை இன்னும் பல மடங்கு விரிவுபடுத்தினர். இன்று மங்கோலியா மிக சுருங்கிய தேசமாக மாறிவிட்டாலும், செங்கிஸ்கானின் புகழ் சுருங்கவில்லை. தனது 65வது வயதில் (கி.மு.,1227ல்) இவர் மரணமடைந்தார்.
↔–- மோகன்
Comments
Post a Comment