சீனாவை சீர்குலைத்த அபின் போர்
ஓபியம் அல்லது அபின் போர் (Opium War 1839–42) என்பதற்கு, நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. பிரிட்டிஷார் உலகின் பல நாடுகளை காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியிருந்த சமயம் அது. தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருட்களை சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சீனர்கள் இறக்குமதி செய்யவில்லை; தன்னிறைவாக இருந்தனர். இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள், இதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். இந்தியாவில் அவர்கள் இலகுவாக காலூன்ற முடிந்தாலும், சீனாவில் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.
இதையடுத்து, இந்தியாவிலும், வங்காள பகுதிகளிலும் பிரிட்டன் அபின் உற்பத்தியில் ஈடுபட்டது. அதை, சீனாவில் இறக்குமதி செய்தது பிரிட்டன். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்பேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.
இதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.
முதலாம் அபின் போர் 1839ம் ஆண்டு முதல் 1842ம் ஆண்டு வரை நடந்தது. இந்தப் போரில், பிரிட்டன் வெற்றி பெற்றது. இப்போரை முதலாம் ஆங்கிலோ- – சீனப் போர் என்றும் அழைப்பர். இங்கிலாந்து வெற்றியால், சீனாவில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் என்ற நிலை உருவானது.
இரண்டாம் அபின் போர் 1856ம் ஆண்டு முதல் 1860ம் ஆண்டு வரை நடந்தது. இதிலும் பிரிட்டன் வெற்றி பெற்றது. வேறு வழியில்லாமல், பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் நிலைக்கு சீனாவின் கிங் பேரரசு தள்ளப்பட்டது.
பிரிட்டன் படைகள் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டன. ஹாங்காங் தீவும் பிரிட்டன் படைவசம் சென்றது. ஹாங்காங் பிரிட்டனின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. சீனாவால் எரிக்கப்பட்ட அபினுக்கு, 90 லட்சம் ரூபாய் நஷ்டஈடு, சீனாவிடம் இருந்து பெறப்பட்டது.
இந்தப் போர்களில், சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரிட்டனுக்கு சாதகமாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், கிங் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகின. வலிமையான சீன நாகரிகம், சிதையத் தொடங்கியது. அரச வம்சத்துக்கு எதிராக, பொதுமக்கள் கிளர்ச்சி செய்வதற்கு, இந்தப் போர்கள் அடிப்படையாக அமைந்தன.
↔– மோகன்
Comments
Post a Comment