நேபாளத்தை கட்டி எழுப்பிய ஷா வம்சம்

பரந்துபட்ட இந்தியாவையே காலனி நாடாக்கி, 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது பிரிட்டன். ஆனால், நமக்குப் பக்கத்தில் உள்ள சிறிய நாடான நேபாளத்தை, பிரிட்டனால் கடைசி வரை அடிமைப்படுத்த முடியவில்லை. இதற்கு, மலைப்பாங்கான நேபாள பூகோள அமைப்பும், ஷா மன்னர்களும் முக்கிய காரணங்கள். வடக்கே சீனாவும், மற்ற மூன்று திசைகளிலும் இந்தியாவும் சூழ, இமயமலையில் அமைந்துள்ளது நேபாளம். நேபாளம், 16ம் நூற்றாண்டு வரை, மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து கிடந்தது. நவீன நேபாளத்துக்கு அடித்தளமிட்டவர்கள், கோர்க்கா நாட்டை ஆண்ட ஷா வம்சத்து மன்னர்கள்.

ஷா வம்சத்து மன்னர்கள், நேபாளத்தை கி.பி-. 1559 முதல் 1846 வரை ஆட்சி செய்தனர். கி.பி. 1559-ம் ஆண்டு, திரவிய ஷா என்பவர், இன்றைய நேபாளத்தில் உள்ள சிறிய பகுதியான கோர்க்காவில், ஷா வம்சத்து ஆட்சியை நிறுவினார். கி.பி. 1736-ல் கோர்க்காவை ஆட்சி புரிந்த ஷா வம்சத்து மன்னரான நரபூபால ஷா, நாட்டை விரிவாக்க எண்ணி, அண்டை சிற்றரசுகள் மீது போர் தொடுத்தார். இந்த விரிவாக்க வேலைகளைப் பெருமளவில் நிறைவேற்றியவர், அவரது மகன் பிருத்வி நாராயணன் ஷா ஆவார். கி.பி. 1745-ல் நேவார் அரச குலத்தினர் ஆட்சி செய்து வந்த காத்மாண்டு சமவெளிப் பகுதியை, கோர்க்கா படை முற்றுகையிட்டது. ஆண்டுக்கணக்கில் நீடித்த முற்றுகையின்போது, நேவார் மன்னர், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களின் உதவியை நாடினார். நேவாரிகளுக்கு உதவ வந்த கேப்டன் கின்லோச் தலைமையிலான கிழக்கிந்தியப் படையால், கோர்க்காக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

கி.பி. 1769க்குள் நேவாரிகளின் கைவசமிருந்த மூன்று தலைநகரங்களான காத்மாண்டு, பதான் மற்றும் லலித்பூர் நகரங்கள் கோர்க்காக்களின் ஆளுகையின் கீழ் சென்றன. பின்னர் கோர்க்கா அரச வம்சத்தினர், நாட்டின் தலைநகராக காத்மாண்டுவை மாற்றினர். பல முற்றுகைகள், போர்களைச் சந்தித்த பின்னர், குறிப்பாக கீர்த்திப்பூர் போருக்குப்பின், பிருத்வி நாராயணன் ஷா, நேபாள நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். இவர்தான், நவீன நேபாளம் உருவாக முக்கிய காரணமானவர். நேபாளத்தின் கிழக்கிலும், மேற்கிலும் பெரும்பாலான பகுதிகளை, தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த கோர்க்கா ராஜ்ஜியம், தற்போது இந்தியாவில் இருக்கும் சிக்கிம் முதல் மேற்கில் கார்வால், குமாவான் நாடு உள்ளிட்ட பகுதிகள் வரை கொண்டிருந்தது.

1788-ல் கோர்க்காக்கள், திபெத் மீது படையெடுத்தனர். கியுரோங் மற்றும் நயாலம் நகரங்களைக் கைப்பற்றிய அவர்கள், திபெத் மன்னரிடம், ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும்படி உத்தரவிட்டனர். 1791-ல் திபெத்தியர்கள், கோர்க்கா மன்னருக்குக் கப்பம் செலுத்தவில்லை. இதனால், திபெத் மீது கோர்க்காக்கள் மீண்டும் படையெடுத்து, அங்கு பெரும் நாசத்தை விளைவித்தனர். இந்நிலையில், சீனாவின் உதவியை நாடியது திபெத். இந்நிலையில், சீனா-வுக்கும் கோர்க்கா படையினருக்கும் இடையே போர் மூண்டது. அதில் கோர்க்கா படை தோல்வியைச் சந்தித்தது. நேபாளத்திற்கு உண்டான இப்பின்னடைவால், 1816ல் ஏற்பட்ட நேபாள- – -சீன உடன்படிக்கையின்படி, நேபாளம், திபெத் மீதான கட்டுப்பாட்டை இழந்தது. மேலும், சீனாவிற்கு ஒரு பெருந்தொகை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டி வந்தது.

இந்திய- – நேபாள எல்லையோரத்தில் இருந்த குறுநில மன்னராட்சிப் பகுதிகளை, தங்கள் நாட்டுடன் இணைப்பது குறித்து, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் நேபாள நாட்டுக்கும் இடையே தோன்றிய கருத்து மோதல்கள், 1815- – 1816ல் ஆங்கிலேய – -நேபாளப் போருக்கு வித்திட்டன. போரின் முடிவில், இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட சுகௌலி ஒப்பந்தப்படி, நேபாளம் கைப்பற்றிய சிக்கிம் உள்ளிட்ட பெரும் பகுதியை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுத் தரும் சூழல் ஏற்பட்டது.

ராணா வம்ச ஆட்சி

1846ம் ஆண்டில், நேபாள தலைமைப் படைத்தலைவராக இருந்தவர் ஜங் பகதூர் குன்வர். அவரைப் பதவியிலிருந்து நீக்க, நேபாள அரசி திட்டமிட்டார். இதனால், நேபாள ராணுவத்துக்கும், அரசியின் விசுவாசப் படைகளுக்கும் போர் நடந்தது. இதில், அரச வம்சத்து இளவரசர்கள் மற்றும் அரண்மனை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது, 'கோட்' படுகொலை என, நேபாள வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. நேபாள படைத்தலைவர் ஜங் பகதூர், ராணா வம்சத்தை நிறுவி, நேபாளத்தை 1846 முதல் 1951 வரை ஆட்சி செய்தார். இவரது பரம்பரையில் வந்தவர்கள், மிக அதிகாரம் பெற்றவர்களாக விளங்கினார்கள். இவர்கள் ஷா பரம்பரையைச் சேர்ந்தவர்களுடன் திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுடைய ஆட்சியில், கணவனுடன் மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது. அடிமைகளாக நியமிக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டனர். குழாய் மூலம் தண்ணீர் பரவலாக்கப்பட்டது. சிறிய, பெரிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

1857 சிப்பாய் கலகத்தை அடக்க, நேபாள நாட்டு கோர்க்கா படைகள், ஆங்கிலேயர்களுக்கு உதவின. பின்னர், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில், நேபாள அரசு, பிரிட்டனுக்கு உதவியது. கி.பி. 1930ல் கோர்க்கா அரசு என்றிருந்த பெயர், நேபாள அரசு என மாற்றப்பட்டது. நாட்டின் தலைநகராக காத்மாண்டு விளங்கியது. 1933ல், கோர்க்காலி மொழியின் பெயர் நேபாள மொழி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மன்னராட்சி நாடாக இருந்த நேபாளத்தில், குடியரசு முறை ஆட்சியை வலியுறுத்தி, 1990 முதல் 2008 வரை உள்நாட்டுப் போர் நடைபெற்றது. நேபாள மக்கள் புரட்சியின் விளைவாக, 2008ல், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகக் குடியரசு நாடாக மாறியது நேபாளம். தற்போது கோர்க்கா மாவட்டம், நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது.

↔– மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்