பூனை பாசத்தால் வந்த மோசம்


பண்டைய எகிப்தியர்கள் பூனை மேல் கொள்ளைப் பிரியமாய் இருந்தார்கள் என்பது, நமக்குத் தெரிந்த விஷயம்தான். பலர், பூனையைக் கடவுளாகக்கூட பூஜித்தனர். ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது என்றால், தாங்கள் தப்பிப்பதைவிட, பூனைகளைத்தான் முதலில் காப்பாற்றுவார்கள். யாராவது பூனையைக் கொன்றுவிட்டால், அவர்களுக்கு மரண தண்டனைதான்.

யார் வீட்டிலாவது பூனை இறந்துபோனால், அந்தக் குடும்பத்தார் துக்கத்தை வெளிப்படுத்த புருவங்களை மழித்துக்கொள்வார்கள். அந்தளவுக்குப் பூனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், பூனை மேல் வைத்த பாசத்தால் அவர்கள் மோசம் போன கதை உங்களுக்குத் தெரியுமா? கி.மு. 525ல், எகிப்தில் உள்ள நைல் டெல்டா பகுதியான பெலுசியத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

கி.மு. 525ல் எகிப்தை ஆண்ட மூன்றாம் பரோவா மன்னனான அமாசிஸ்க்கும், அண்டை நாடான பாரசீகப் பேரரசுக்கும் கடும் பகை. இதனால், பாரசீகப் படை எகிப்தில் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற சூழல்.

எகிப்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்குன்றுகள் மீது பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வில்வித்தையில் பலே கில்லாடிகள். கழுகுப் பார்வை எனச் சொல்வார்களே, அந்த அளவுக்குத் தூரத்தில் இருக்கும் இலக்கைக் குறிதவறாமல் சிதறடிப்பார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே, பாரசீக நாட்டின் இரண்டாம் காம்பீசஸ் மன்னர், படை பரிவாரங்களுடன் கிளம்பி வந்தார். அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு அதிகமாக இருந்தது. இதைப் பார்த்த எகிப்து வீரர்கள் உஷார் அடைந்தனர். அவர்களை அடித்து நொறுக்கிவிடலாம் என்று எண்ணி, தங்கள் முதுகில் இருந்து அம்பை எடுத்துக் குறிபார்த்தனர்.

குறி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. புலி போல் நடந்து வந்த பாரசீகப் படையினர் கையில் பூனைகள். எகிப்தியர்கள் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்தோ பரிதாபம், எடுத்த அம்புகளை எய்ய முடியாமல் சிலைபோல் நின்றனர் எகிப்திய வீரர்கள்.

எகிப்திய படைத் தளபதிக்கும், மன்னன் அமாசிஸ்க்கும் சிந்தனையில் எதுவுமே ஓடவில்லை. பாரசீகப் படையினர் இலகுவாக எகிப்து அரச கோட்டைக்குள் நுழைந்தனர்.

இந்தப் போரில் உயிரிழந்த எகிப்தியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம். பாரசீகப் படையினரின் உயிரிழப்பு வெறும் 7 ஆயிரம் தான். அதன்பிறகு 200 ஆண்டுகள் எகிப்தை, பாரசீகப் பேரரசு ஆண்டது. பூனைப் பாசத்தால் எகிப்தியர்கள் மோசம்போன இந்த யுத்தம் வரலாற்றில் ‘பெலுசியம் போர் ’ (Battle of Pelusium) எனப்படுகிறது.

எதிரிகளின் பலவீனத்தை எப்படி புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, போரில் வெல்லலாம் என்பதற்கு உதாரணமாக, பிரபல வரலாற்றாசிரியர் பாலியனஸ் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். காரணம், மூன்றாம் பரோவா மன்னனை விடவும், இரண்டாம் காம்பீசஸ் மன்னர் போர் நுணுக்கத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பூனையைக் கேடயமாகப் பயன்படுத்தி இருக்காவிட்டாலும் காம்பீசசுக்கே வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனாலும், தனது தந்திரத்தால், படைக்குச் சேதாரமின்றி வெற்றிக்கனியை முன்கூட்டியே பறித்ததால் தான், இன்றளவும் அவனது போர்த் தந்திரம் பாராட்டப்படுகிறது.




போலி மணமகளால் வந்த வினை

பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடட்டஸ் போர் காரணத்தை விளக்குகிறார். ‘பாரசீக நாட்டின் மன்னனான இரண்டாம் காம்பீசஸ், எகிப்து மன்னனான அமாசிஸின் பெண்ணை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு கடிதம் எழுதினான். ஆனால், தனது மகளை காம்பீசசுக்கு மணம் முடித்துத்தர அமாசிஸ்க்கு விருப்பமில்லை. 
அதேசமயம், வலிமை வாய்ந்த பேரரசனான காம்பீசஸையும் தட்டிக்கழிக்க முடியவில்லை. இதனால், எகிப்தின் முன்னாள் மன்னரான ஆப்ரிசீன் மகளை ஈரானுக்கு (பாரசீகம்) அனுப்பி வைத்தார். காம்பீசசுக்கு இந்த உண்மை தெரியாது. 
எனினும், ஆப்ரிசீன் மகளுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. எனவே, காம்பீசசின் அவையில் இந்த உண்மையை அவள் போட்டு உடைத்தாள். இதனால், வெகுண்டெழுந்த காம்பீசஸ் உடனே போர் முரசைக் கொட்டினான். அமாசிஸுக்கு எதிராகப் படைகளைத் திரட்டிக்கொண்டு போனான்.’ என்றார்.
– சிவசக்தி

 
போர்களும் பூனைகளும்

போரில், பாரசீகர்கள் மட்டும் பூனையைப் பயன்படுத்தவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலும் நெடுங்காலமாக, வணிக மற்றும் போர் நோக்கங்களுக்காகப் பூனைகளைத் தங்களுடன் கப்பல் மாலுமிகள் அழைத்துச் சென்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, கப்பலில் உள்ள உணவை எலிகள் கபளீகரம் செய்துவிடும். மேலும், கயிறுகளை கடித்துத் துண்டாக்குவது, நோய்களைப் பரப்புவது என்று எலிகளால் பல தொல்லைகள் உண்டு. இதனால், எலித்தொல்லையைக் கட்டுப்படுத்த பூனைகள் பெரிதும் பயன்பட்டன. இரண்டாவது காரணம், மாலுமிகளின் கடல் தனிமையைப் போக்க. பூனைகள் மனிதர்களுடன் விளையாடும் தன்மை உடையது என்பதால், கடல் பயணத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்க அவை உதவின.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்