ஆ, ஊன்னா கூட்டம் கூட்டமா கொடிய தூக்கிக்கிட்டு கிளம்பிடுறாங்க!
மா ணவர்களே! உலகின் முதல் வேலைநிறுத்தம் எப்போது நடைபெற்றது தெரியுமா?. சொன்னால் நம்ப மாட்டீர்கள், கி.மு. 1170ம் ஆண்டில்தான் முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. எகிப்தில் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான நிகழ்வுகள் வரிக்கு வரி, பாப்பிரஸ் (papyrus) தாளில் எழுதி ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்த வேலை நிறுத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து அப்படியே ஏறக்குறைய 3200 ஆண்டுகள் பின்னோக்கி போங்கள். அப்போது எகிப்து சாம்ராஜ்யத்தை, மூன்றாம் ராம்சஸ் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அந்த நாட்டு கலாசாரப்படி, ஒவ்வொரு மன்னனும், தான் வாழும்போதே தனக்கான கல்லறையை கலைநயத்துடன் பார்த்துப்பார்த்து பிரம்மாண்டமாக கட்டிக்கொள்வான். இன்று நாம் பார்க்கும் பிரமிடு எல்லாம் அதுபோன்ற கல்லறைகள்தான். இதேபோல், ராம்சஸ் மன்னரின் கல்லறையைக் கட்டமைக்க, நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களும், கைவினைக் கலைஞர்களும் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு ஊதியமாக, மாதத்திற்கு ஒருமுறை, தேவையான கோதுமை தானியங்களை மன்னர் வழங்க வேண்டும்.
என்ன போதாத காலமோ தெரியவில்லை, சரியான நேரத்தில் கைவினைக் கலைஞர்களுக்கு உணவுப்பொருளை வினியோகிக்க முடியாமல் போனது. முதல் மாதம் 23 நாட்கள் கால தாமதமாகவும், ஐந்தாம் மாதம் 28 நாட்கள் கால தாமதமாகவும், ஆறாம் மாதம் 14 நாட்கள் தாமதமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால், கைவினைஞர்கள் தங்கள் கைக்காசைப் போட்டு, வெளிச்சந்தையில் உணவு தானியங்களை வாங்கி காலத்தை ஓட்ட வேண்டியிருந்தது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கைவினைஞர்கள் நடையாய் நடந்து, புகாருக்கு மேல் புகார் கூறினர்.
ஆனால், அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர். அரசு கஜானாவைக் கொள்ளையடிப்பதிலேயே கவனமாக இருந்தனர். அதனால், கைவினைக் கலைஞர்களின் புகார்கள், செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆகிப்போனது. 6 மாதங்களாகியும் பிரச்னை சரிசெய்யப்படவில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே, அந்தக் கதை நிகழ்ந்தது. ஆம், தொழிலாளர்கள் பொங்கி எழுந்தார்கள்.
நேரே மன்னரின் அரண்மனைக்கு வந்த அவர்கள், கைகளிலிருந்த உளி உள்ளிட்ட கருவிகளைத் தரையில் வீசி எறிந்தனர். ‘எங்களுக்குச் சேர வேண்டிய கோதுமை தானியம், சிறிதும் பாக்கி இல்லாமல் தரப்பட வேண்டும்; அதுவரை வேலையில் இறங்க மாட்டோம்’ என்று எகிப்து மேயரிடம் அதிரடியாய் அறிவிப்பை வெளியிட்டனர்.
அதுவரை, ஆண்டான் அடிமைக் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்த அதிகாரவர்க்கம், அரண்டு போனது. ஆம், வேலை நிறுத்தப்போராட்டம் என்பதெல்லாம் அதுவரை அவர்கள் கேள்விப்பட்டிராத ஒன்று. மன்னரின் காதுகளுக்கு விஷயம் போனால், தங்கள் கதை முடிந்தது என்று பயந்துபோன அதிகாரிகள், அலறியடித்துக்கொண்டு கோதுமை தானியங்களை வரவழைத்து தொழிலாளர்களின் ஊதியத்தை ஒழுங்காய் வழங்கினார்கள். தற்காலத்தைப் போல், முதல்கட்டப் பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை, பத்தாம் கட்டப் பேச்சுவார்த்தை என்று தொழிலாளர்கள் இழுத்தடிக்கப்படவில்லை.
அழும் பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும் என்ற உண்மையை உணர்த்தும் இந்தச் சம்பவம், உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தீயாய்ப் பரவியது. அதுவரை பல குறைகளை மனத்தில் வைத்து குமுறிக்கொண்டிருந்த தொழிலாளர்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு, வேலைநிறுத்தப் போராட்டம் என்பதை அறிந்துகொண்டனர். அதற்கு முன்னோடியாய், பண்டைய எகிப்தின் வேலைநிறுத்தப்போராட்டச் சம்பவம் அமைந்தது என்றால், அது மிகையல்ல.
– சிவசக்தி

Comments
Post a Comment