சிங்கபுராவிலிருந்து சிங்கப்பூர் வரை

ஒரு பெரிய தீவு, 63 மிகச் சிறிய தீவுகள்... இதுதான் சிங்கப்பூர். மலாய் (மலேசியா) தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ளது சிங்கப்பூர். சிங்கப்பூருக்கான பெயர்க் காரணத்தைச் சொல்லும், பிரபல நாடோடிக் கதை ஒன்று உண்டு. சுமத்ராவைச் சேர்ந்த (சுமத்ரா இப்போதைய இந்தோனேசியாவின் ஒரு பகுதி) இளவரசர் ஸ்ரீவிஜயன், 13ம் நூற்றாண்டில், ஒரு தீவில் காலடி வைத்தார். அங்கே அவர் முதலில் ஒரு சிங்கத்தைக் கண்டு, அதை மங்களமான குறியீடாகக் கருதி மகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து, சிங்கபுரா என்றும் அதற்குப் பெயரிட்ட அவர், அந்தத் தீவில் மக்களைக் குடியேற்றினார் என்று அந்தக் கதை சொல்கிறது.

11ம் நூற்றாண்டில், சோழச் சக்ரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை வெற்றிகண்டார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர், சோழர்கள் வசம் வந்தது. 14ம் நூற்றாண்டில், சயாம் மற்றும் மஜாபாகித் பேரரசுகள் சிங்கப்பூரை அடைவதற்குக் கடும் முயற்சி செய்தன. இறுதியில், மஜாபாகித் பேரரசு வெற்றி கண்டு, சிங்கப்பூரைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. பின்னர், சிங்கப்பூரை மலாகா (மலேசியா) சுல்தான் கைப்பற்றினார்.

இப்படிப் பலரிடம் கைமாறிய சிங்கப்பூர், 1511ல், போர்துகீசியர் வசம் சென்றது. இவர்கள் சிங்கப்பூரில் இருந்த மக்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்; எல்லா குடியேற்றங்களும் அழிக்கப்பட்டன. 17ம் நூற்றாண்டுக்குள், சிங்கப்பூர் என்ற தீவே, முற்றிலும் சின்னாபின்னமாகி அழிந்துபோனது.

இதனிடையே, பினாங்கு (மலேசியா), ஜாவா (இந்தோனேசியா) ஆகியவற்றில் நிலவி வந்த போர்துகீசியர்களின் அதிகாரம், பிரிட்டிஷாரின் கண்களை உறுத்தியது. காரணம், சீனா மற்றும் இந்தியாவுடனான வணிகப் பாதையில், பிரிட்டிஷாருக்கு இது பெரும் தடையாக இருந்தது. இதனால், போர்துகீசியர் ஆதிக்கத்தைக் குறைக்க, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது, பிரிட்டிஷ் குறிவைத்த இடம்தான் மலாய் பகுதி. இதைத் தொடர்ந்து, சர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ் என்பவரை மலேயா பகுதிக்கான பொறுப்பாளராக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நியமித்தது.

மலாகா ஜலசந்தியில் (மலாயா பகுதிக்குட்பட்டது) புதிதாகவே ஒரு துறைமுகத்தை உருவாக்க அவர் தீர்மானித்தார். இதற்காக, மலேயா தீபகற்பத்தின் பல பகுதிகளை ஆராய்ந்தார். சிங்கப்பூர்தான் சிறப்பான இடம் என்று அவர் முடிவு எடுத்தார்.

அந்தக் காலகட்டத்தில், சிங்கப்பூர் தீவை ஜோஹோர் சுல்தான் என்பவர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். இவர் டச்சுக்காரர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தார். சுல்தான் 1812ல் இறக்கவே, அவரது இரண்டு மகன்களும், வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டனர்.

சர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், சுல்தானின் மூத்த மகனை ஆதரித்து, அவரையே அடுத்த சுல்தானாக பொறுப்பேற்க உதவினார். அதற்குப் பதில் அவரிடம் இருந்து சிங்கப்பூரைக் குத்தகைக்கு பெற்றுக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளிலேயே மொத்தமாக விற்றுவிடும்படி சுல்தானை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வற்புறுத்தி, சுல்தானை சம்மதிக்க வைத்தது.

1819 பிப்ரவரி 6 அன்று, பிரிட்டிஷாருக்கு, சிங்கப்பூர் விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, அந்த இடத்தில் நவீன துறைமுகத்தை உருவாக்கியது. இதுவே, நவீன சிங்கப்பூருக்கு அடித்தளமாக அமைந்தது.

↔– மு.கோபி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்