அரசியல் சாசனத்தின் முன்னோடி ஹம்முராபி
எழுத்துப் பூர்வமாக இருக்கும் சட்டங்களில், நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான சட்டத் தொகுப்பு, 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பேரரசர் ஹம்முராபி இயற்றிய சாசனம்தான் (ஹம்முராபி சட்டங்கள்: Hammurabi's Code). அமெரிக்காவின் தலைமைச் செயலகத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், ஹம்முராபியின் சட்ட பங்களிப்புக்கு மரியாதை செய்யும் வகையில், அவரது புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.
உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் மெசபடோமியா பகுதியில் இருந்த பாபிலோனிய தேசத்தில், கி.மு., 1810ல் (ஏறத்தாழ 4,000 ஆண்டுகளுக்கு முன்) ஹம்முராபி பிறந்தார். அன்றைய மெசபடோமியா, இன்றைய தென்மேற்கு ஆசியப்பகுதிகளான ஈராக், குவைத், தென் சிரியா உள்ளடக்கியிருந்தது. ஹம்முராபியின் இளமைக்காலத்தில், அவருடைய தந்தையும், பாபிலோனிய மன்னருமான சின்- முபல்லித்தை பார்த்து ஆட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று கற்றுக்கொண்டார். 18 வயதாக இருக்கும்போது, அவருடைய தந்தை நோய்வாய்ப்பட்டு இறக்கவே, பாபிலோனிய மன்னராக ஹம்முராபி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹம்முராபி மன்னராகும்போது, பாபிலோனியா தேசம் மிகவும் சிறிய தேசம். அதைச் சுற்றியிருந்த, அசிரிய தேசம், மரி தேசம், லார்சா தேசம் மற்றும் எஷ்னுன்னா தேசம் ஆகியவை பலமிக்க அரசுகளால் ஆளப்பட்டு வந்தன. இதனால், பாபிலோனை, மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான நகராக மாற்ற அவர் கவனம் செலுத்தினார்.
ஹம்முராபி, அண்டை நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்களை போட்டார். அதன்பின்னர், பாபிலோனின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினார். அதற்கடுத்து பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தி, படைகளை வலுப்படுத்தினார். நகரைச் சுற்றி பெரும் அரண்களை அமைத்தார். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தியதால், விவசாயம் செழித்து வளர்ந்தது.
போர்த்திறன்
இந்நிலையில், மெசபடோமியா மீது படையெடுத்து வந்த எலம் அரச படை, எஷ்னுன்னா தேசத்தைக் கைப்பற்றியது. அவர்களின் அடுத்த குறி, பாபிலோனாக இருந்தது. இதையடுத்து, அண்டை நாடான லார்சாவோடு கூட்டணி அமைத்தார் பாபிலோனிய மன்னர் ஹம்முராபி. ஆனால், போர் நடக்கும் போது, லார்சா படைகள் களத்துக்கு வந்து உதவவில்லை. எனினும், மனம் தளராமல், தன்னுடைய படைகளை மட்டும் வைத்து, எலமத்திய படைகளை சுக்குநூறாக்கினார் ஹம்முராபி.
இந்த வெற்றி, அவருக்குப் பெருமையைக் கொடுத்தாலும், இக்கட்டான நேரத்தில் லார்சா நாட்டு படைகள் தமக்கு துரோகமிழைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதே வேகத்தில், லார்சா மீது படையெடுத்தார் ஹம்முராபி. அதில் வெற்றி கிடைக்கவே, அண்டை நாடுகளையும் படிப்படியாக கைப்பற்றினார் ஹம்முராபி. குறுகிய காலத்துக்குள் மெசபடோமியா பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் ஹம்முராபி. தான் ஆட்சி செய்த நாற்பத்து இரண்டுஆண்டுகளில் நான்கில் ஒரு பகுதி உலகை, பாபிலோனிய பேரரசின் ஆளுகைக்கு கீழ், அவர் கொண்டு வந்தார் .
நிர்வாகத் திறன்
தன் ஆட்சிக்கு கீழ் இருந்த பகுதிகளில், வேளாண்மை, வணிகம், உட்கட்டமைப்பு ஆகியவற்றிலும், சட்டம் ஒழுங்கிலும் ஹம்முராபி அதிகம் கவனம் செலுத்தினார். புதிய கால்வாய்களும், செயற்கைப் பாசன வசதிகளையும் அமைத்தார் அவர். எனினும், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட வெவ்வேறு நாட்டு மக்களை, ஒரே ஆட்சிக்கு உட்படுத்துவது சிரமமான காரியம் அல்லவா? இதனால், தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாக, 282 சட்டங்களை இயற்றினார் ஹம்முராபி. இதற்காகவே இன்றளவும் அவர் உலக மக்களால் நினைவு கொள்ளப்படுகிறார்.
பாபிலோனியர்கள் 'ஷம்மாஷ்' ஐ (Shammash) நீதிக்கடவுளாக வழிபட்டார்கள். 'சிப்பரா' (Sippara) எனப்படும் நகரில், ஷம்மாஷுக்கு ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலில் 8 அடி உயரம், 7 அடி சுற்றளவில் ஒரு பெரிய நடுகல்லை நிறுவி, அதில் மொத்தம் 282 சட்டங்களைச் செதுக்கினார் ஹம்முராபி. அக்காடியன் (Akkadian) என்ற மொழியில் எழுதப்பட்ட இச்சட்டங்கள், குடும்பம், அடிமை முறை, விவசாயம், வணிகம், நீதி வழங்கும் முறை போன்ற விஷயங்களை உள்ளடக்கி இருந்தது. இந்தக் கல்லின் மேற்பகுதியில், ஆசனத்தில் அமர்ந்த நிலையில், ஷம்மாஷ், ஹம்முராபி மன்னருக்கு சட்டத் தொகுப்பை உபதேசிப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான சட்டங்கள்
ஹம்முராபியின் சட்டப்படி, அநியாயமாக யாரையாவது அடித்தால், அடித்தவருக்கு அபராதம் உண்டு. அதுவே சமூகத்தின் முக்கியப்புள்ளி என்றால், அவருக்கு அதிக அபராதம். கடத்தல், திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்முறை, போர்க் களத்தைக் கண்டால் புறமுதுகிட்டு ஓடுபவர்கள், லஞ்சம் போன்ற குற்றங்களுக்கெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெற்றோரை கை நீட்டி மகன் அடித்தால், அடித்த இடத்திலேயே திருப்பி அடிப்பதுதான் அவனுக்கான தண்டனை. மீறி, இரண்டாவது தடவையும் தந்தைக்குத் தொல்லை கொடுத்தால், மகனின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஒருவரை ஓங்கிக் குத்தி, அவர் பல் உடைந்தால், பதிலுக்கு குத்திய நபரின் பல் உடைக்கப்படும். அலட்சியமாக அறுவை சிகிச்சை செய்து நோயாளி இறந்தால், மருத்துவரின் விரல்கள் வெட்டப்படும். வீடு கொள்ளையடிக்கப்பட்டு குறித்த காலம் கடந்த பின்பும் காவலர்கள் திருடர்களைப் பிடிக்காமல் மெத்தனம் காட்டி வந்தால், காவலர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
மேலும், திருடப்பட்ட தொகையை அரசாங்கமே பறிகொடுத்தவருக்கு அளிக்கும். இந்த சட்டங்கள் அனைத்தும் 1900ல் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. ஹம்முராபியின் இந்த சட்டத் தொகுப்பு, தற்போது பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் உள்ளது.
– மு.கோபி
Comments
Post a Comment