காலனிய எதிர்ப்பின் கதாநாயகன் ‘திப்பு சுல்தான்’

இந்தியர்களை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்க்க, வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த திப்பு சுல்தான் போன்ற ஒரு மன்னன், வரலாற்றில் வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்று திப்பு சுல்தானை, அன்றைய லண்டன் பத்திரிகைகள் பெயரிட்டு அழைத்தன. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை போன்ற, ஏராளமான தென்னிந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, திப்பு உந்து சக்தியாக இருந்தார். திப்பு சுல்தான், ஆங்கிலேயே காலனி எதிர்ப்பின் முக்கிய கதாநாயகன்.

மைசூர் புலி என, அழைக்கப்பட்ட திப்பு சுல்தான், 1782ம் ஆண்டிலிருந்து, 1799ம் ஆண்டு வரை, மைசூரின் அரசை ஆட்சி செய்தார். தமது 17ம் வயதிலேயே, போர்ப்படைத் தளபதியாக இருந்து, ஆங்கிலேயருக்கு எதிரான வாணியம்பாடி போரில் வெற்றி பெற்றார். சிறந்த அறிவாளியாக இருந்த திப்பு, தனது படையில் ராக்கெட், பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உபயோகித்தார். இதனால், ஆங்கிலேயேர்கள் திப்புவுடனான பல்வேறு போர்களிலும், தோல்வியையே தழுவினர். பின்னர், 32வது வயதில், மைசூர் மன்னரானார்.

ஒருமுறை 4 ஆயிரம் ஆங்கிலேய படையினரை போர்க் கைதிகளாக பிடித்தார் திப்பு. இது ஆங்கிலேயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், ஐதராபாத் நிஜாம், புதுக்கோட்டை தொண்டைமான் ஆகிய உள்ளூர் அரசுகளை ஆங்கிலேயப் படையினர் கூட்டணியில் இணைத்தனர். அனைவரும் ஒன்று திரண்டு திப்புவின் கோட்டையை முற்றுகையிட்டனர். ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் கோட்டையையும் தூரத்திலிருந்து பார்க்க மட்டுமே முடிந்தது’ என்று குறிப்பிட்டார் ஆங்கிலேய அதிகாரி மன்றோ. போரின் இறுதிக்கட்டத்தில், மராட்டிய மன்னர்கள், திப்புவுக்கு துரோகம் இழைத்ததால், ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

எனினும், பீனிக்ஸ் பறவைப் போல, திப்பு மீண்டும் எழுந்து வந்தார். இதனைக் கண்ட ஆங்கிலேயர்கள், திப்புவை நேரடியாக தோற்கடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டனர். திப்புவின் அமைச்சர்களை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். இறுதிப்போரில், 11 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையை வைத்து, திப்பு ஆங்கிலேயர்களுடன் போரிட்டு, கொல்லப்பட்டார். இந்த செய்தியை கேட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினார்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ ....

*************************************


‘நாசாவில் திப்புவின் ராக்கெட்டா!’ - வியந்த அப்துல் கலாம்

‘அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கழகமான நாசாவின் வரவேற்பு கூடத்தில், ஒரு மிகப்பெரிய ஓவியத்தைப் பார்த்து வியப்படைந்தேன். ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களத்தின் காட்சி அது; வேறெதுவும் இல்லை. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு நடத்திய ராக்கெட் தாக்குதல் நடத்திய காட்சி...

திப்புவின் ராக்கெட் போர் நுட்பத்தை, அவருடைய தாய்நாடு மறந்துவிட்டது. ஆனால், நவீன ராக்கெட் நுட்பத்தின் உச்சத்தில் உள்ள நாசாவில், திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் நினைவு கூறப்படுவது, இந்தியன் என்ற வகையில் எனக்கு பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் தருகிறது.’ என்று அப்துல் கலாம் வியந்து கூறினார்.

***********************************

திப்புவின் சாதனைகள்

*நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் திட்டம்.

*நாடெங்கும் மதுவிலக்கு.

*பெண்கள் மேலாடை அணிய தடைகளை நீககம்.

*உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற விவசாய சீர்திருத்தம்.

*தொழில் வளர்ச்சியில் கவனம்.

*இந்துக்கோவில்களுக்கு சம உரிமையும் நீதியும் வழங்கியது.

*குற்றங்களுக்கான தண்டனை கடுமையானது.

*ஆடம்பர திருமணத்தை தடுக்க, சிக்கன திருமண சட்டம்.

**********************

திப்புவின் கடைசி வார்த்தைகள்

எதிரிகளுடன் போரிட்டு, திப்பு குண்டு காயங்கள் அடைந்தார். தனது கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், ‘அரசே! ஆங்கிலயேரிடம் சரணடைந்து விடலாமா’ என, பதறியவாறு கேட்டார். இதைக்கேட்டு கோபமடைந்த திப்பு, ‘ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்வதைவிட, புலியைப் போல, இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம் ’ என்றார்.

***************************************

எதிரிகளின் மனம் வென்ற திப்பு

திப்பு, போர் ஒன்றில் பல்லாயிரம் ஆங்கிலேயே வீரர்களை சிறைப்பிடித்தார். அதில், ஒருவரான ஆங்கிலேயே தளபதியின் நிலை தொடர்பாக, அவரது மனைவி திப்புவுக்கு கண்ணீருடன் கடிதம் எழுதினார். அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்த தளபதியை விடுதலை செய்தார் திப்பு. கூடவே, அவரது பிள்ளைக்கு, யானை தந்தத்தால் செய்த பொம்மைகளையும பரிசாக கொடுத்தனுப்பினார். நன்றி உணர்வில் அந்த பெண், ‘ உங்கள் முகத்தை என் வீட்டில் வைத்து தினம் நன்றி பாராட்ட விரும்புகிறேன்’ என்று கடிதம் எழுதினார். அதன்படியே, திப்புவும் தனது படத்தை ஆங்கிலேயே பெண்ணுக்கு அனுப்பி வைத்தார்.






Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்