ஜப்பானின் முகத்தை மாற்றிய மெய்ஜி புரட்சி
ஜப்பான் பொருட்களுக்கு என்றைக்குமே ஒரு மதிப்புண்டு. மலிவான பொருட்களுக்கு சீனா உதாரணம் என்றால், தரமான பொருட்களுக்கு ஜப்பான் உதாரணம். இந்தியாவும், நம் அண்டை நாடான சீனாவும், ஐரோப்பிய காலனிய ஆட்சிக் காலத்தில், பெரும் சீரழிவைக் கண்டன. அதன் தாக்கத்திலிருந்து இன்றளவும் நம்மால் மீள முடியாத நிலையில், ஜப்பான் மட்டும் உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறியது என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஜப்பானில், 19வது நூற்றாண்டில் ஏற்பட்ட ‘மெய்ஜி புரட்சி’ அல்லது ‘மெய்ஜி மீட்சி’ என்ற நிகழ்வே, அந்நாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்க காரணம். புவியமைப்பு ரீதியாக, ஜப்பானில் நான்கு பெரிய தீவுகளும், ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளும் உண்டு. பண்டைய காலம் தொட்டே இந்த தீவுகளில், பல்வேறு ஆட்சிகள் நடந்து வந்தன. 17ம் நூற்றாண்டில் ‘டொகுகவா ஷோகன்கள்’ (The Tokugawa shogunate) என்ற ராணுவக் குழுக்கள், ஜப்பானுடைய பெரும்பகுதியை ஆட்சிபுரிந்தன.
1860களில் யோஷினோபு (Tokugawa Yoshinobu) என்பவர், ஜப்பானை ஆண்டு கொண்டிருந்தார். அவரது காலத்தில், நிலப்பிரபுத்துவ அமைப்பு நிலவியது. பெரும்பாலான நிலம் ஒரு சில பண்ணையாளர்களுக்குச் சொந்தமாக இருந்தது. ‘சாமுராய்’ என்றழைக்கப்பட்ட உயர்வகுப்பினர், சமூகத்தில் பல்வேறு சலுகைகளைப் பெற்றிருந்தனர். சாமானியர்களின் நிலை மோசமாயிருந்தது.
1850களில் வியாபாரம் செய்வதற்காக ஐரோப்பியர்கள், ஜப்பானில் நுழைந்தனர். இந்தியாவைப் போலவே ஜப்பானையும் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். ஆனால், அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனினும், தந்திரமான வியாபார ஒப்பந்தங்களால், ஜப்பானியர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டினர். ஐரோப்பிய, அமெரிக்கர்களை ஜப்பானிய ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும், வெள்ளையர்கள் அளவுக்கு அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. இதனால், மேற்கத்திய வணிகர்களை எதிர்ப்பதில் ஷோகனிய ஆட்சியாளர்களின் இயலாமை மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. ‘வளமான நாடு, வலிமையான ராணுவம்’ என்னும் கோஷத்துடன் இளம் சாமுராய்கள் தலைமையில் சில குழுக்கள் போராட்டத்தில் இறங்கின. எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத ஷோகன் யோஷினோபு, மெய்ஜி மன்னர் ‘மட்சுஹிடோ’விடம், 1868ம் ஆண்டு ஜனவரி 3ல் ஆட்சியை ஒப்படைத்தார்.
அதுதான் ஜப்பான் வரலாற்றில் நிகழ்ந்த திருப்புமுனை சம்பவமான, ‘மெய்ஜி மீட்சி’. அறிஞர் குழுவினருடன், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இணைந்து நடத்திய ஆலோசனையில், டோக்கியோ தலைநகராக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டுவந்த பகுதிகள், ஒருங்கிணைக்கப்பட்டன. ஜப்பான் முழுமையாக ஒரே மத்திய அரசின்கீழ் வந்தது. மக்களுக்கிடையே இருந்த வகுப்பு பிரிவினைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டன. அதாவது, சாமுராய்கள் மற்றும் இதர மேற்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. யோஷினோபுவின் படை கலைக்கப்பட்டு, தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு மூன்று வருட ராணுவ சேவை கட்டாயம் ஆக்கப்பட்டது. குடிமக்கள் அனைவரும், குறைந்தபட்சம் ஆறு வருடங்களாவது பள்ளியில் பயில வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரிவிதிப்பு முறைகள், சட்ட, -நீதிமன்ற அமைப்புகள், கல்விமுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புத்த மதத்தின் செல்வாக்கு குறைக்கப்பட்டு, ஜப்பானியரின் ஆதிமதமான ‘ஷிண்டோ’ மதம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. தொழில்துறையை வளர்க்கும் வழிகள் ஆராயப்பட்டு, உடனடியாக செயல்படுத்தப்பட்டன. நவீன தொழிநுட்பங்கள் உடனுக்குடன் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ரயில் பாதைகள், தபால் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், கப்பல் கட்டும் துறைகள், சுரங்கங்கள், ஆயுதத் தொழிற்சாலைகள், சர்க்கரை, சிமென்ட், வேதிப்பொருள்கள், கண்ணாடி என எண்ணற்ற பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அடுத்த இருபது ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பல பெரிய தொழில் குழுமங்களும் உருவாகின.
அரசியல் சட்டப்படி, 1889ம் ஆண்டில் ’டயட்’ எனப்படும் நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. இந்தியா, சீனா, இலங்கை போன்ற ஆசிய நாடுகள் காலனி ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு கொண்டிருந்த காலத்தில், அசுர வேகத்தில் ஜப்பான் முன்னேறியது. பொருளாதார வலிமையிலும் வாழ்க்கை தரத்திலும் மேற்கத்திய நாடுகளை மிஞ்சும் வகையில் ஜப்பான் வளர்ந்தது. 1894ல், கொரியாவின் மீது யாருக்கு உரிமை என்பதில், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் போர் வெடித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜப்பான் போரில் வென்றது. அதன்பின்னர், 1905ல் ரஷியாவுடன் நடைபெற்ற போரிலும் வென்று, ஜப்பான் வல்லரசாக உருவானது.
1912ல் மெய்ஜி அரசர் இறந்துவிட அவரது மகனான யோஷிஹிடோ மன்னரானார். இவரது ஆட்சிகாலத்தில் மெய்ஜி புரட்சியின் பலன்களை மக்கள் முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். பொருளாதாரம் வளர்ந்ததால் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. 1925ல் வயது வந்த அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 1912--- – 1930 காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக ஜப்பானியரின் வாழ்க்கை உயர்ந்தது.
இந்நிலையில், 1930களில் ஏற்பட்ட உலகலாவிய பொருளாதார பெருமந்தம் ஜப்பானை கடுமையாகப் பாதித்தது. அதனால், மேற்கத்திய நாடுகளைப் போலவே காலனி நாடுகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சி அடையும் முயற்சியில் ஜப்பான் இறங்கியது. அப்போது ஏற்பட்ட குழப்பங்களால், ஜப்பானில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. 1945ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல் நிகழ்த்தியது. இந்த தாக்குதலில், ஒட்டுமொத்த ஜப்பானும் சின்னாபின்னமானது. ஜப்பானின் கதை அத்தோடு முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்திருக்க, சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல், அடுத்த 30 ஆண்டுகளில் ஜப்பான் மீண்டும் முன்னேற்றமடைந்தது. இந்த அதிசயத்துக்கு, மெய்ஜி புரட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல், நிர்வாக மற்றும் கல்விச் சீர்த்திருத்தங்களும், அடிப்படை கட்டமைப்புகளும்தான் காரணம் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.
Comments
Post a Comment