இந்திய பத்திரிகைகளின் முன்னோடி அகஸ்டஸ் ஹிக்கி


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் அச்சு எந்திர தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையத் தொடங்கியது. ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) என்பவர், 1780ம் ஆண்டு ஜனவரி 29ல், பெங்கால் கெசட் (Bengal gazette) என்ற செய்தி இதழை வெளியிட்டார். இதுதான், இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாளாக கருதப்படுகிறது. 12 x 8 (அங்குலம்) என்ற அளவில், இரண்டு பக்க வார இதழாக, ஆங்கிலத்தில் பெங்கால் கெசட் வெளியானது. இங்கிலாந்து இதழ்களில் வெளியான செய்திகள், விளம்பரங்கள், கடிதங்கள் முதலியன இந்த இதழில் இடம் பெற்றன.

ஆங்கில அரசின் முறையற்ற செயல்களையும், அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கிண்டலடிக்கும் நடையில் செய்திகள் வெளியாகின.

அப்போதைய ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ், அவரது மனைவி, உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே ஆகியோர் பற்றியும் செய்திகளை வெளியிட்டார். அதனால் ஹிக்கி, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இருந்துகொண்டே, ஆளுனருக்கு எதிராக எழுதி, பத்திரிகையில் வெளியிட்டார். ஆத்திரமடைந்த வாரன் ஹேஸ்டிங், பத்திரிகை இயந்திரங்களை பறிமுதல் செய்தார். இதனால், இரண்டே ஆண்டுகளில், அதாவது 1782 மார்ச் மாதம் பெங்கால் கெசட் இதழ் நின்றது.

எனினும், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் பத்திரிகை, ஆங்கிலேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. இந்தியர்களுக்கும் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் செய்தி இதழ்கள் வெளிவரத்தொடங்கின. இதனால், இந்தியச் செய்தித்தாள்களின் தந்தையாக ஜேம்ஸ் அகஸ்டஸ் கருதப்படுகிறார்.

↔-– கோபிநாத்



பிற இதழ்கள்

1780ம் ஆண்டு பி.மெஸ்ஸின்க், பீட்டர் ரீட் ஆகியோர், கல்கத்தாவிலிருந்து ‘இந்தியா கெசட்’ என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டனர். இது, ஆங்கிலேய அரசின் ஆதரவு இதழாக வெளிவந்தது. பின்னர், 1784ல் ‘கல்கத்தா கெசட்’ இதழும், 1785ல் ‘ஓரியண்டல் மேகஸின்’ , மற்றும் பெங்கால் ஜர்னல் ஆகிய ஆங்கில இதழ்களும் கல்கத்தாவிலிருந்து வெளிவந்தன.
1785ம் ஆண்டு ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற ஆங்கில வார இதழ் சென்னையிலிருந்து வெளியானது. 1789ல் பாம்பே ஹெரால்ட், 1790ல் பாம்பேகூரியர், 1791ல் பாம்பே கெசட் முதலிய ஆங்கில வார இதழ்கள், பம்பாயிலிருந்து (இன்றைய மும்பை) வெளிவந்தன.
1818ல் திக்தர்சினி என்ற வங்க மொழி இதழும், 1821ம் ஆண்டு மீரட் அல் அக்பர் என்ற பாரசீக மொழி இதழும், 1822ம் ஆண்டு மும்பாய்னா சமாச்சார் என்ற குஜராத்தி மொழி இதழும் வெளிவந்தன. இந்திய இதழ்கள் தொடக்கத்தில் சமயப் பிரசாரங்களையும், ஆங்கிலேய அரசின் செய்திகளையும் மட்டுமே வெளியிட்டன.


தொழில்முறை பத்திரிகையாளர் அல்ல

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி பத்திரிகை நடத்துவதற்கு முன்னர், வேறு எந்தப் பத்திரிகையிலும் வேலை பார்த்ததில்லை. அவருக்கு எந்த அனுபவமும் கிடையாது. சொல்லப்போனால், ‘எனக்கு பத்திரிகை துறை குறித்து, பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை’ என்று சொல்வார். தனக்கு தோன்றியதை, தனது எண்ணத்தை வெளியிடவே 'பெங்கால் கெசட்' பத்திரிகையை நடத்துவதாக தெரிவித்தார். ஆனாலும், அவரது எழுத்துநடை, ஏழை, பணக்காரர் பேதமின்றி அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கும் அவரது தொனி உள்ளிட்டவை வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்