நூற்றாண்டுப் போரும் 38 நிமிடப் போரும்

‘நூற்றாண்டு கால போர்’ (Hundred Years' War) என்று அழைக்கப்படும் போர் தான் உலகத்தின் மிக நீளமான போர் ஆகும். இது பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து படைகளிடையே நடந்தது. ‘நூற்றாண்டுகால போர்’ என்று குறிப்பிடப்பட்டாலும், 116 ஆண்டுகள் இப்போர் நீடித்தது.
1337ல் ஆரம்பித்த போர், 1453ல் தான் முடிவடைந்தது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ள, பிரான்ஸ் படைகள் மோதின. தன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள பிரிட்டன் போரிட்டது. இந்தப் போர் நடந்து முடிவதற்குள், ஏராளமான ஆட்சி மாற்றங்கள். கடைசியாக, போர் முடிவில் பிரஞ்சு பகுதிகள், பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தன.
உலகின் சிறிய போர் எத்தனை ஆண்டுகள் நடந்தது? வெறும் 38 நிமிடங்கள்தான்.
1896, ஆகஸ்ட் 27ல், இங்கிலாந்துக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா பிரதேசத்தில் உள்ள சான்சிபார் அரசுக்கும் இப்போர் நடந்தது. சான்சிபாரி சுல்தானாக  இருந்த அலி பின் சையத், ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தார். அவர் மரணமடைந்தவுடன், சான்சிபாரிகள் புதிய சுல்தானாக (அரசனாக) அலி பின் சையத்தின் ஒன்றுவிட்ட சகோதரரான காலித் பின் பர்காஷை தேர்வு செய்தனர்.
புதிய சுல்தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர். இதனால், பிரிட்டிஷாரோ அவர் பதவியேற்கக் கூடாது; தாங்கள் சொல்லும் ஒருவரைத்தான் மன்னராகத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும், குறிப்பிட்ட அவகாசத்துக்குள் அரண்மனையை காலி செய்யாவிட்டால், போர் மூளும் என்றும் அறிவித்தனர்.
ஆனால், பிரிட்டிஷாரின் மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த சான்சிபாரி மக்கள்,  அரண்மனையைச் சூழ்ந்து சுல்தான் காலித்துக்கு பாதுகாப்பளித்தனர். 700 போர் வீரர்கள் உட்பட 3,000 மக்கள் அங்கிருந்தனர். இதையடுத்து, சான்சிபாரிகள் மீது பிரிட்டிஷார் தாக்குதல் நடத்தியதில், 500 சான்சிபாரிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள்.
பிரிட்டிஷ் தரப்பில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 38 நிமிடங்களில் போர் முடிவுக்கு வந்தது. 1963ல், சான்சிபார் சுதந்திரம் பெறும்வரை, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி இருந்தது.
↔– மோகன்

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்