கொரியர்களின் கதாநாயகன்



வெறும் 13 போர்க் கப்பல்களுடன், நூற்றுக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் கொண்டிருந்த ஜப்பானைத் தோற்கடித்த பெருமை கொண்டவர் யி சன் சின் (Yi Sun- Sin). கொரியாவின் கதாநாயகனாக கொண்டாடப்படும் இவரை, வரலாற்று ஆசிரியர்கள் வியப்புடன் பார்க்கின்றனர். தனது சிறப்புமிக்க போர் வியூகங்களால், ஆச்சரியமான வெற்றிகளை குவித்த யி சன் சின்னின் வரலாறு சுவாரஸ்யமானது.

உஷார்:

கொரியாவில் இருந்த ஜோசுன் பேரரசு மீது (Josun Dynasty-) 1592ல் ஜப்பான் படையெடுத்தது. இந்தப் போரை ஜோசுன் பேரரசு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எந்த ஆயத்தமும் இல்லாததால், ஜப்பானியப் படைகளிடம் பெரும்பகுதிகளை இழக்க நேரிட்டது. ஆனால், யி சன் சின் இப்படியொரு படையெடுப்பு நிகழலாம் என்று முன்பே கணித்து வைத்திருந்தார்.

காரணம், ஜப்பானியப் படைத் தளபதியான டொயோட்டமி ஹிடயோஷி (Toyotomi Hideyoshi), சீனா மீது படையெடுக்க உள்ளதாகவும், கொரியா வழியாக படையை நகர்த்திச் செல்ல உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதை ஜோசுன் பேரரசு, சீனாவுக்கு நேரப்போகும் ஆபத்து என்ற அளவில் மட்டுமே கருதியிருந்தது. ஆனால், கப்பற் படையில் புதிதாக இணைந்திருந்த யி சன் சின் என்ற இளைஞர், உஷாரானார்.

அவர் ஆயத்தநிலையில் நிறுத்தியிருந்த வெறும் 13 போர்க் கப்பல்களை மட்டுமே வைத்துக்கொண்டு, ஜப்பானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தார். ஜப்பானியர்களிடம் இருந்த போர்க் கப்பல்களின் எண்ணிக்கையோ 133.

வியூகங்கள்:

இதற்கு அவர் மேற்கொண்ட போர்வியூகம் தான் முக்கியமானது. ஆமை வடிவத்தில் கப்பல் கட்டி, அதில் பல முனைகளிலும் ஏவுகணை, பீரங்கிகள் போன்றவற்றைப் பொருத்தி வைத்தார் யி சன் சின். ஆமை வடிவக் கப்பல்கள் ஏற்கெனவே சீனாவில் நடைமுறையில் இருந்தாலும், அதை ஆற்றல்மிக்க போர்க் கருவியாக மாற்றிய பெருமை, யி சன் சின்னையே சேரும். மேலும், நாரைப் பறவையின் சிறகுகளைப் போல் எதிரிகளை சுற்றி வளைக்கும் வழிமுறையையும் அவர் கையாண்டார். நாரை இறக்கை உத்தி மூலம் மட்டும், ஜப்பானியர்களது 59 கப்பல்களை மூழ்கடித்தார் யி சன் சின். இதில் ஆச்சரியமான விஷயம், யி சன் சின்னுக்கு கடற்படை யுத்தத்தில் எந்த முன் அனுபவமும் கிடையாது என்பதுதான்.

அவர் முதல் போரில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், ஏதோ அதிர்ஷ்டத்தால் ஜெயித்துவிட்டதாகக் கூறலாம். ஆனால், அதன் பின்னர் 7 ஆண்டுகள் நடந்த 22 போர்களிலும் யாராலும் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. கொரியாவை, ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து தொடர்ந்து காப்பாற்றினார்.

அசாத்திய வீரம்:
இந்நிலையில், 1598ல் நடந்த நோர்யாங் போரில், யி சன் சின் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படும் தருணத்தில், ஜப்பானியர்கள் தோற்கும் நிலை காணப்பட்டது. அவர் சொன்ன புகழ்பெற்ற கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா? ‘போரில் நம் கைகள் ஓங்கும் நிலை உள்ளது. போரைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருங்கள். என் இறப்பை யாருக்கும் அறிவிக்காதீர்கள்’ என்றார் யி சன் சின். கடைசிவரை அசாத்திய வீரத்தையும், தேசப்பற்றையும் வெளிப்படுத்திய யி சன் சின், கொரியர்களால் கதாநாயகனாகவே பார்க்கப்படுகிறார்.

↔– சிவசக்தி

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்