செரோக்கி களின் கண்ணீர் தோய்ந்த பயணம்
அமெரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடி மக்களில் ஓர் இனம் செரோக்கி (Cherokee). ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று குடியமர்ந்தவர்கள், அங்கு காலனிய ஆட்சியை ஏற்படுத்தி, அமெரிக்க பூர்வகுடிகளை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றினர் என்று நமக்குத் தெரியும்.
அந்த வகையில், 19ம் நூற்றாண்டில் பூர்வகுடிகளான செரோக்கி இனத்தவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் ஜார்ஜியா, தென் கரோலினா ஆகிய பகுதிகளில் கணிசமாக வாழ்ந்தனர். செரோக்கி இனத்தவர்கள், புதிய தொழில்நுட்பங்களை அங்கீகரிப்பதில்லை, நவீன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளனர் என ஆட்சியாளர்கள் கருதினர். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜியாவில் செரோக்கிகள் தங்கிக்கொள்ள அனுமதி அளித்தார்.
அதன் பின்னர் சில ஆண்டுகளில், செரோக்கி இனத்தைச் சார்ந்த சிறு குழு ஒன்று, அந்தத் துரோகத்தைச் செய்தது. ஆம், செரோக்கிகளை வெளியேற்ற அமெரிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்று உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இதையடுத்து, 1830ல், பூர்வகுடி மக்களை வெளியேற்ற, அரசுக்கு அதிகாரம் வழங்கி புதுச் சட்டம் இயற்றப்பட்டது. அமெரிக்க ஆட்சியாளர்கள், ஒக்லஹாமா மாகாணத்துக்குச் செரோக்கிகளை செல்லப் பணித்தனர். இதற்குச் செரோக்கிகள் மறுப்புத் தெரிவிக்கவே, அமெரிக்க ராணுவம் அதிரடியாக உள்ளே புகுந்தது. அம்மக்களை துப்பாக்கி முனையில் பலவந்தமாக வெளியேற்றினர்.
ஜார்ஜியாவில் இருந்து ஒக்லஹாமா வரை மக்கள் நடந்தே சென்றனர். இந்தத் துயரமான பயணம் நெடுகிலும், பல்வேறு இன்னல்களுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாகினர். நோய்வாய்ப்பட்டனர். குழந்தைகள் உணவின்றி மடிந்தனர். இதில், 5 ஆயிரம் செரோக்கிகள் உயிரிழந்தனர். அவர்கள் கண்ணீர் சிந்தக் காரணமாக இருந்த இந்தச் சம்பவம் பின்னாளில், 'கண்ணீர் தடம்' (Trail of Tears) என்றானது. செரோக்கீ மொழியில் இது, ‘நுன்னா டவுல் இசுன்யி’ எனப்படுகிறது.
பூர்வகுடி அமெரிக்கர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர்.
– சிவசக்தி
Comments
Post a Comment