மரப்பற்றாக்குறையால் பிறந்த தேசம் அமெரிக்கா

மரப்பற்றாக்குறையால் பிறந்த தேசம் அமெரிக்கா
உங்கள் உலகை இயக்கும் எரிபொருள் எது? நீங்கள் அமெரிக்காவின் காலனியவாதியாக இருந்தால், மரக்கட்டை என்பதே உங்கள் விடையாக இருந்திருக்கும். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே அவன், விறகுக்கட்டைகளை எரித்து வருகிறான். ஆனால், குளிரிலிருந்து தப்பிப்பதற்காக மட்டும் அவனுக்கு அந்த விறகுக்கட்டைகள் பயன்படவில்லை. ஒரு நாட்டையே சக்திமிக்கதாக மாற்றி ஆட்சி செய்வதற்கும் அது காரணமாக அமைந்தது.
அந்த முக்கியமான வரலாற்று நிகழ்வு பிரிட்டனில் இருந்து ஆரம்பித்து. 1500களில் பிரிட்டனில் அதுவரை யாருமே நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. ஆம், பிரிட்டனில் திடீரென மரக்கட்டை பற்றாக்குறை ஏற்பட்டது. பிரிட்டனில் காடு முழுவதுமாக மொட்டையடிக்கப்பட்டுக் கிடந்தது. 93 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள காடு, இப்போது வெறும் தரையாக காட்சியளித்தது. மறுபுறம் குளிர் மக்களை வாட்டி வதைத்தது. குளிர்காய மரக்கட்டைகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. மரங்கள் இவ்வளவு விரைவாய் குறைந்ததற்கு, அப்போது வேகமாக நடந்து வந்த நகரமயமாக்கல் முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக, நகரவாழ் மக்களின் மரத்தேவையை ஈடுகட்ட முடியவில்லை. அதோடு, பேப்பர் மற்றும் நகர கட்டுமானத் தேவைகளுக்காகவும் மரங்கள் தேவைப்பட்டன. இதனால், மரத் தொழிலில் ஈடுபட்டோர் விழிபிதுங்கி நின்றனர்.
பிரிட்டன் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் நிலவிய மரப்பற்றாக்குறை பெரும் தலைவலியாய் மாறியது. பிரிட்டனின் அடர்த்திக் காடுளை இரவு பகலாய் அழித்தாலும், மக்கள் தேவையை சரிகட்ட முடியாத நிலை காணப்பட்டது. இதில், வழக்கம்போல ஏழைகள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளானர்கள். பொருளாதார வரலாற்று அறிஞர் ஜான் நெஃப் இப்படி சொல்கிறார், ‘இங்கிலாந்தில் வேறெந்த பொது பயன்பாட்டு பொருளும், மரத்தின் விலைக்கு பக்கத்தில் நெருங்கவே முடியவில்லை. கிடுகிடுவென விலை உயர்ந்தது. நெருப்பில்லை என்றால், உணவும் இல்லை, உஷ்ணமும் இல்லை. ’ என்றார்.
ஏழை வெள்ளையர்களுக்கு இரண்டே வழிகள் தான் முன்னின்றது. விடை தேடு அல்லது விறைத்து போ! ஆம், ஒன்று மரப்பற்றாக்குறையை போக்க மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். இல்லாவிட்டால் விறைந்து சாக வேண்டும். உண்மையிலேயே பலரும் குளிரால் விறைத்து உயிரிழந்தார்கள். அவர்கள், காலனிய குடியேற்றங்களில் தான் தங்கள் விடையைக் கண்டனர். அணி அணியாக பலரும் வட அமெரிக்காவை நோக்கி சென்றனர். அங்கிருந்த நிலைமை பிரிட்டனுக்கு அப்படியே நேர்மாறாய் இருந்தது. ஆம், கண்கள் கானும் இடங்கள் எல்லாம் அடர்த்தியான வனங்கள் ; பார்த்த உடனே தலைகால் புரியாமல் அதை வெட்டத் தொடங்கினர்.
பிரிட்டனின் எரிபொருள் தேவைளுக்காக மட்டும் மரங்கள் வெட்டப்படவில்லை. விவசாய நிலங்கள், நகர உருவாக்கம் மற்றும் சாலை அமைக்க என பல்வேறு காரணங்கள் இருந்தன. பிரிட்டன் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதுக்கும் மரங்கள் சப்ளை செய்யப்பட்டன. மறுபுறம் காடுகள் என்றாலே காலனியவாதிகளுக்கு ஒவ்வாமை இருந்தது. காடுகளின் காட்சி, அவர்களுக்கு அச்சமூட்டுவதாய் இருந்தது. நகர சிந்தனையில் மூழ்கியிருந்த அவர்களுக்கு காடுகள் வெறுப்பாய் இருந்தது. 1662ல், மைக்கேல் விக்கல்ஸ்வொர்த் என்ற மதகுரு இப்படி எழுதுகிறார், ‘ இந்த இருள்மிக்க மோசமான வனாந்திரங்கள் வீணானவை. காட்டுமிராண்டிகளும், தீய சக்திகளுமே இங்கு குடியிருப்பர். ’ என்றார்.
ஆரம்பகால காலனியவாதிகள், மர அறுவைத் தொழிலை பெருமளவில் நிறுவி காடுகளை விரைவாய் அழித்துக்கொண்டிருந்தனர். பென்சில்வேனியா மாகாணத்தின் நிறுவனரான வில்லியம் பென், ‘ஐந்து ஏக்கர் காடுகளை அழித்தால், ஒரு ஏக்கரை விட்டுவிட வேண்டும் ’ என்று சட்டம் இயற்றும் அளவுக்கு காடுகள் மொட்டையடிக்கப்பட்டன. ‘ரம்மியான வனப்பகுதி காட்சிகளை விடவும், கோதுமை வயல்களும், முட்டைகோஸ் தோட்டங்களுமே பிரிட்டன் காலனியர்களின் கண்களுக்கு அழகாய் தெரிந்தன. மரங்கள் மீது கட்டுப்படுத்த முடியாத வெறுப்பை அவர்கள் கொண்டிருந்தனர். எங்கேனும் குடியேற்றங்கள் நிகழுமாயின், அதற்கு முன் அந்த இடத்தில் இருக்கும் மரங்களை ஒன்றுவிடாமல் வெட்டி எறிந்தனர். ’ என்று 1795ல் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஐசாக் வெல்ட் கூறுகிறார். அமெரிக்காவிலிருந்து டன் டன்னாக மரங்கள் ஏற்றுமதியாக, நவீன வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு பொருட்களும் இறக்குமதி ஆகின.
குடியேற்ற நாடான அமெரிக்காவிலும் விரைவில் மரப்பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்து. 1740களில் பெஞ்சமின் பிராங்க்ளின் மரப்பற்றாக்குறை குறித்து புகார் தெரிவித்தார். இதனால், மற்ற இடங்களில் இருந்து மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. பற்றாக்குறை அதிகமாகவே, 1769ல் மசாசூசெட்ஸ், கனக்டிகெட், நியூ ஹாம்சைர் மற்றும் வெர்மோன்ட் ஆகிய பகுதிகளில் இருந்த காடுகளிலும் கை வைக்கப்பட்டன.
1650 மற்றும் 1850 இடையேயான காலகட்டத்தில், அமெரிக்காவின் வடகிழக்கு காடுகளின் பாதியளவு வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. அதன்பின்னர், அமெரிக்காவில் தொழில்மயம் வேகமாக நடக்கவே, காடுகளை அழிப்பதும் இன்னும் அதிகரித்தது. அமெரிக்க ஆற்றல் நிர்வாகத் துறையின் கணக்குப்படி, ரயில்வேயின் 90 சதவீத எரிபொருள் தேவையை மரக்கட்டைகளே பூர்த்தி செய்தன. தனிநபர் விறகுக்கட்டையின் பயன்பாட்டை கேட்டால் தலைசுற்றலே வந்துவிடும். 4.5 கார்டுகளாக இருந்தன (4.5 cords per capita). ஒரு கார்டு என்பது எட்டு அடி நீளமுள்ள விறகுக்கட்டைகளை நாலு அடி அகலம் மற்றும் நாலு அடி உயரத்துக்கு அடுக்கி வைக்கும் அளவாகும். நல்லவேளையாக, 19ம் நூற்றாண்டில் நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்தது. எனினும், அதற்குள் அமெரிக்க காடுகள் ஏராளமாக அழிக்கப்பட்டிந்தன.
தற்போது அமெரிக்காவில் மரங்கள் அதிகளவில் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 1600 களில் இருந்த நிலையை ஒப்பிட்டால், அதில் தற்போது மூன்றில் இரண்டு பங்கு மரங்களே உள்ளன. எனினும், ஒருவேளை மரப்பற்றாக்குறை ஏற்படாமல் இருந்திருந்து காலனி குடியேற்றங்கள் நிகழாமல் இருந்திருந்தால் இன்றைய அமெரிக்கா உருவாகியிருக்குமா? என்றால் நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். உலகின் பொருளாதார வல்லரசாக அமெரிக்காவால் மாறியிருக்க முடியாது. தற்போது வனப்பாதுகாப்புக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் ஒரு காலத்தில் நிலவிய மரப்பற்றாக்குறையே நவீன அமெரிக்காவின் வளர்ச்சிக்குரிய முக்கிய காரணங்களுள் ஒன்று என்பது வரலாற்று உண்மை.

Comments

Popular posts from this blog

பல பெயர்கள் கண்ட தேசம் கம்போடியா

தனித்துவமிக்க கிரேக்க நாகரிகம்

மீண்டும் எழுந்த ஐரோப்பா - மறுமலர்ச்சி காலம்