நிலைத்து நிற்கும் கெட்டிஸ்பெர்க் உரை
உலகின் தலைசிறந்த சொற்பொழிவுகளில் முக்கியமானதாக "கெட்டிஸ்பர்க்' உரை போற்றப்படுகிறது. இது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்டது. அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் கெட்டிஸ்பர்க் போர்க்களத்தின் நினைவிடத்தில் 1863, நவம்பர் 19ல் இவ்வுரையை நிகழ்த்தினார். இந்த உரையில்தான் ‘மக்களால், மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி’ (that government of the people, by the people, for the people, shall not perish from the earth) என்ற புகழ்பெற்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்க நாட்டின் தென் மாநிலங்கள் கறுப்பர்களை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டின. ஆனால் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று லிங்கன் தலைமையில் அமெரிக்க அரசும் வடமாநிலங்களும் போராடின. இரு தரப்புக்கும் 1861 முதல் 1865 வரை நடந்த யுத்தமே அமெரிக்க உள்நாட்டுப் போர் என்று அழைக்கப்படுகிறது.
அதில் பென்சில்வேனியா மாநிலத்தில் கெட்டிஸ்பர்க் என்ற போர்க்களத்தில் வட மாநிலங்கள் பெற்ற வெற்றி, போரின் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. வடமாநிலங்கள் தரப்பில் அமெரிக்க அரசுக்காகப் போராடி 23,000 வீரர்கள் உயிரை தியாகம் செய்தனர். அந்த வீரர்களின் நினைவிடத்தில் நின்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் என்ற முறையில் 54 வயது நிரம்பிய ஆபிரகாம் லிங்கன் செலுத்திய அஞ்சலிதான் கெட்டிஸ்பர்க் உரை.
போர்முனையில் மாண்டுபோன போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதோடு, இக்கட்டான சூழலில் நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தது. எதிர் காலத்துக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. 15,000 பேர் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் லிங்கன் பேசியது மூன்றே மூன்று நிமிடங்கள், வெறும் 272 சொற்கள். ஆனால், அந்தப் பேச்சு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.
‘போர்களுக்காக அர்ப்பணிப்பதை விட, மேலான லட்சியங்களுக்கு நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும். மக்களால் மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி மறையாது பாதுகாப்போம்' என்று அவர் முடித்த அச்சிறிய உரையில், தான் சொல்ல வந்த அனைத்து கருத்துகளையும் திறம்பட எடுத்துரைத்தார்.
ஒலிபெருக்கி இல்லாமல் இந்த உரை நிகழ்த்தப்பட்டது. மறுநாள் பல முக்கியப் பத்திரிகைள் லிங்கனை விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்டன. நிகழ்ச்சிக்கு சம்பந்ததே இல்லாமல் பேசியுள்ளார் என்று குறைகூறின. ஆனால், அதுதான் இத்தனை ஆண்டுகளைத் தாண்டியும் நம் நெஞ்சைத் தொடுகின்றன.
லிங்கன் வலியுறுத்திய மக்களாட்சித் தத்துவம் உலகெங்கும் பரவி இருக்கிறது. மக்களால் மக்களுக்காக நடக்கும் மக்களாட்சி என்ற சொற்கள்தான் அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்படுகிறது. பல மக்கள் இயக்கங்களுக்கு வழி காட்டியாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கறுப்பர் இனத்தைச் சார்ந்த ஒருவர் வெள்ளை மாளிகையில் அதிபராக பொறுப்பேற்கவும் காரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல
Comments
Post a Comment