ஓநாயிடம் பால் உண்ட ரோம் நகர நிறுனவர்
கி.மு. 753ல் ரோம் நாடு உருவாக்கப்பட்டது. ரொமுலஸ் மற்றும் ரெமஸ் ஆகியோர்தான், ரோம நகர அரசை நிறுவியவர்கள். இவர்களின் தந்தை, நுமிட்டர், இத்தாலி நாட்டில் ஆல்பா லங்கா என்ற பகுதியின் ஆட்சியாளராக இருந்தார். ரொமுலஸ் மற்றும் ரெமஸ் பிறப்பதற்கு முன்பே, அவர்களின் தந்தையை, சித்தப்பா அமுலியஸ் கொன்றுவிட்டான்.
ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட சித்தப்பா அமுலியஸ், நுமிட்டரின் மனைவியைச் சிறையில் அடைத்தான். அவருக்குச் சிறையிலேயே, ரொமுலஸ், ரெமஸ் என்ற இரட்டைச் குழந்தைகள் பிறந்தனர். எதிர்காலத்தில் நுமிட்டரின் வாரிசுகளால், தனது அதிகாரத்துக்கு அச்சுறுத்தல் வரலாம் என்று அச்சப்பட்டு, ரொமுலஸையும் ரெமஸையும் கொன்றுவிடும்படி உத்தரவிட்டான் சித்தப்பன் அமுலியஸ். இந்தப் பணி, ரகசியமாக அரண்மனை வேலைக்காரனிடம் கொடுக்கப்பட்டது.
எனினும், குழந்தைகளைக் கொல்ல வேலைக்காரனுக்கு மனமில்லை. இதையடுத்து, மரக்கூடையில் இருவரையும் பத்திரமாக வைத்து திபெர் நதியில், போட்டுவிட்டான் வேலைக்காரன். அப்போது அங்கிருந்த அத்திமரத்தின் வேர்பகுதியில் மரக்கூடை சிக்கி, கரை ஒதுங்கியது. அங்கிருந்த ஓநாய் தான் அந்தக் குழந்தைகளுக்குப் பாலூட்டிக் காப்பாற்றியதாக புராணக் கதைகள் கூறுகின்றன. பின்னர், குழந்தைகள் இல்லாமல் இருந்த ஆடுமேய்ப்பவர் ஒருவரின் மனைவி, ரொமுலஸையும் ரெமஸையும் மீட்டு வளர்த்து வந்தார்.
இருவரும் வளர்ந்து, ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஒருநாள், ரெமஸ் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அரண்மனை ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பனோடு, அவனுக்குச் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, அரண்மனைக் காவலர்கள், ரெமஸைக் கைதுசெய்து, மன்னர் முன்பு நிறுத்தினர். அரண்மனை மேய்ப்பனிடம் தவறு இருந்தபோதும், ரெமஸைச் சிறையில் அடைக்க மன்னன் அமுலியஸ் உத்தரவிட்டான்.
இதனால் ஆத்திரமடைந்த ரெமஸின் அண்ணன் ரொமுலஸ், படைதிரட்டிக் கொண்டு சென்றான். அங்கு ஏற்பட்ட போரில், கொடுங்கோல் மன்னன் அமுலியஸ் கொல்லப்பட்டான். இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள், ரொமுலஸ் தான் அடுத்த மன்னனாக வரவேண்டும் என்று கோரினர். எனினும், இதை ரொமுலஸ் மறுத்துவிட்டான்.
பின்னர், புதிய ராஜ்ஜியத்தை உருவாக்க விரும்பிய ரொமுலஸ், ரெமஸ் சகோதரர்கள், இரண்டு இடங்களைத் தேர்வு செய்தனர். பாலன்டைன் மலை (Palatine Hill) உச்சியில்தான், புதிய நகர் உருவாக்கப்பட வேண்டும் என்று ரொமுலஸ் கூறினான். அவன்டைன் மலை (Aventine Hill) உச்சியில் புதிய நகர் உருவாக்க வேண்டும் என்று ரெமஸ் வாதிட்டான்.
எனினும், அவர்களால் அனுப்பப்பட்ட பறவைகள், பாலன்டைன் மலை உச்சியில் அமர்ந்தன. இதையடுத்து, பாலன்டைன் புதிய தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும், ரெமஸுக்கு இது பிடிக்கவில்லை. பாலன்டைன் இடத்தில் நடந்துவந்த புதிய நகருக்கான கட்டுமானப் பணிகளைக் கேலி செய்தான் ரெமஸ். கிண்டல் செய்வதற்காக, கோட்டைச் சுவரைத் தாண்டிக் குதித்தபோது, ரெமஸுக்குக் காயம் ஏற்பட்டு உயிரிழந்தான். ரொமுலஸ் உருவாக்கிய நகருக்கு, ‘ரோமா’ என்றே பெயரிடப்பட்டது.
ரோமாவில் உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்புகளும் சட்டங்களும் அரசு அமைப்புகளும் மிகச்சிறப்பாக இருந்தன. ரோமாவின் புகழ், அண்டை தேசங்களுக்கும் பரவியது. படையெடுத்து வந்தவர்கள், தோற்றுப் போனார்கள். ரோமாபுரி மிக வேகமாக வளர்ந்து, பெரும் ராஜ்ஜியமாக உருவெடுத்தது.
Comments
Post a Comment