உலகம் கவனிக்காமல், ஏமனில் ஒரு பெருயுத்தம்!
சவூதி அரேபியாவின் தலைமையில் நடந்து வரும் இம்மோசமான யுத்தத்தின் விளைவாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 20 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 2004ல் ஆரம்பித்த உள்நாட்டுக் கலகம், 2015ல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இக்கொடூர யுத்தம், ஒட்டுமொத்த நாட்டையும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. ‘ஞானத்தின் இருப்பிடம்’ என்று அரேபியர்களால் பெருமையாகக் குறிப்பிடப்பட்ட நாடு ஏமன். உலகின் தொன்மையான நாகரிகப் பெருமையைக் கொண்ட ஏமன், வடக்கில் சவூதி அரேபியாவையும், கிழக்கில் ஓமானையும், வடமேற்கில் செங்கடலையும் எல்லைகளாக கொண்டது. மகிழ்ச்சிமிக்க அரபகம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இப்பிரதேசம், இன்று சின்னாபின்னாப்பட்டு கிடக்கிறது. 2015ல் தொடங்கிய அதிபர் ஹைதிக்கு எதிரான உள்நாட்டுப் போர், முடிவுறாக் கொடுங்கனவாய் நீண்டு கொண்டேப் போகிறது. ஹூத்தி கலவரக்காரர்களை ஒடுக்கப்போவதாக சொல்லி, அமெரிக்க ஆதரவு கொண்ட சவூதி தலைமையிலான சர்வதேசக் கூட்டுப் படைகள் இப்போரை இடைவிடாமல் நடத்தி வருகின்றன. ஆகாயத்திலிருந்து பொழியும் குண்டு மழை, குறைவதற்கான அறிகுறிகள் இதுவரைத் தென்படவில்லை. ஷியா- சன்னி பகையைப் பயன்படுத...